2016-02-13 14:58:00

திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை Kirill சந்திப்பு


பிப்.13,2016. அன்பு நேயர்களே, அது ஒரு ‘மாபெரும் ஆரத்தழுவல்’. அதுதான் பிப்ரவரி 12, இவ்வெள்ளிக்கிழமை மாலையில் கியூபத் தலைநகர் ஹவானா விமான நிலையத்தில் நடந்தது. இந்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்நிகழ்வு, உலக வரலாற்றில், சிறப்பாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. கிறிஸ்தவத்தில் மாபெரும் பிரிவினை ஏற்பட்ட(கி.பி.1054) ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், இரு கிறிஸ்தவத் திருஅவைகளின் தலைவர்கள், இரு கரங்களையும் அகல விரித்து, ஒருவரையொருவர் கட்டித் தழுவி, ‘நாங்கள் சகோதரர்கள்’, ‘நாங்கள் உடன்பிறப்புகள்’ என்று உலகுக்கு அறிவித்த நிகழ்வு இது. ஆம். கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களும், கியூபாவில் சந்தித்து, இரு கிறிஸ்தவ திருஅவைகளுக்கு இடையே ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்த நாள் இது. இத்தகைய ஒரு சந்திப்பு, அண்மைத் திருத்தந்தையர் காலத்தில் குறைந்தது மூன்று முறை நடைபெறவிருப்பதுபோல் காணப்பட்டது. புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் காலத்தில் ஒரு முறையும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக் அவர்கள் காலத்தில் இரு முறையும் இடம்பெறுவது போல் இருந்தாலும், கடைசியில் இடம்பெறவில்லை. தற்போதும், பல ஆண்டுகள் முயற்சிகளுக்குப் பின்னர் இச்சந்திப்பு நடந்துள்ளது. இரஷ்யா சென்று சந்திக்க இயலா நிலையில், ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் வந்திருந்த இடத்திற்குத் திருத்தந்தை சென்று சந்தித்தார். எத்தகைய இடர்கள் நேரிட்டாலும் பரவாயில்லை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பாலங்களைக் கட்டவும், உரையாடலை மதிக்கவுமான முயற்சிகளில் பின்வாங்குவதில்லை என்ற திருத்தந்தையின் பண்பிற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது. இச்சந்திப்பிற்கு குறைந்தது நான்கு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இச்சந்திப்பு, கடவுளின் கொடை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார். இச்சந்திப்பை, பழமைவாத ஆர்த்தடாக்ஸ் சபையினர் வரவேற்கவில்லை.

மெக்சிகோ நாட்டிற்கான தனது ஐந்து நாள் திருத்தூதுப் பயணத்தை இவ்வெள்ளி காலை 7.45 மணிக்கு உரோம், ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 12 மணி, 15 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து, முதலில் ஹவானா, ஹோசே மார்ட்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கினார். மெக்சிகோ பயணத் திட்டத்தில் கடைசியாகச் சேர்க்கப்பட்ட புதிய நிகழ்வு இது. அங்கு கியூப அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அவர்கள், திருத்தந்தையை வரவேற்றார். விமான நிலையத்தில் ஏற்கனவே காத்திருந்த இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், ‘என் அன்பு சகோதரரே, உங்களை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று சொல்லி திருத்தந்தையை வரவேற்றார். திருத்தந்தையும், ‘நாம் சகோதரர்கள், பலகாலம் எதிர்பார்த்த சந்திப்பு நடந்துவிட்டது’ என்று சொல்லி, இருவரும், ஒருவரையொருவர் கட்டித்தழுவி மூன்று முறை கன்னங்களில் முத்தமிட்டனர். பின்னர் இச்சந்திப்புக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மரத்தால் வேயப்பட்ட எளிய அறைக்குச் சென்றனர். கத்தோலிக்கத் திருஅவை மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முக்கிய தலைவர்கள், இரு மொழி பெயர்ப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே இத்தலைவர்களுடன் இவ்வறையில் இருந்தனர். இவ்விரு திருஅவைகளும் இணைந்து ஆற்ற வேண்டிய பல விடயங்கள் பற்றி மனம்திறந்து பேசினர். இச்சந்திப்பு, இறைவனின் திட்டம் என்று திருத்தந்தை கூறினார். இப்போது காரியங்கள் எளிதாகியுள்ளன என்று முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் கூறினார். பின்னர் மற்றோர் அறையில், இவ்விருவரும் இணைந்து அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முதுபெரும் தந்தை கிரில் அவர்களும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், மனிதப் பண்பாட்டின் மற்றும் கிறிஸ்தவத்தின் வருங்காலத்திற்காக, நம் மக்களுக்காக நம் திருஅவைகளின் பொறுப்பை முழுவதும் புரிந்தவர்களாக, ஏறக்குறைய இரண்டு மணி நேரம் மனம் திறந்து பேசினோம், இந்த உரையாடல், ஒருவர் ஒருவரையும், ஒருவர் ஒருவரின் நிலையையும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை மிகுதியாகத் தந்தது என்றும், இன்னும் பல தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். பின்னர், திருத்தந்தை அவர்கள், இந்த உரையாடலில் தூய ஆவியாரின் ஆறுதலை தான் உணர்ந்ததாகக் கூறினார். கியூப அரசுத் தலைவருக்கு நன்றியும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.