2016-02-13 14:45:00

தவக்காலம் முதல் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு, அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். சோதனை ஓர் எதிரிபோலவும், நம்மைத் தாக்கக் காத்திருக்கும் ஒரு மிருகம் போலவும் நம் கற்பனையில் பல உருவங்கள் உலா வருவதால், இந்த பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத ஒரு முக்கிய அம்சம் என்பது விளங்கும். சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை. இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் நமக்கு நல்ல பாடங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தின் இந்த முதல் ஞாயிறுக்கான மறையுரையைப் பற்றி இன்னொரு அருள்பணியாளரோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். ‘சோதனை’ என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் ஒரு பழையத் திரைப்பட பாடலைப் பாட ஆரம்பித்தார். "சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி" என்ற பாடல். இந்தப் பாடலைப் பாடும் படத்தின் நாயகனின் வாழ்க்கையில், தீர்க்க முடியாதது போல் தோன்றும் பல பிரச்சனைகள் எழுகின்றன. எனவே, விரக்தியில், சோகத்தில் இந்தப் பாடல் பாடப்படும். சோகத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட இந்தப் பாடலைப் பாடும்போது, எதுவுமே செய்யமுடியாத ஓர் இயலாத் தன்மை மனதை ஆக்ரமிக்கும்.

நம்மை மீறிய ஒரு சக்தியில் நாம் மாட்டிக்கொண்டோம் எனவே நம்மால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்பன போன்ற எண்ணங்களை, உணர்வுகளை பல சமயங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். தலைவிதி, தலையெழுத்து என்ற எண்ணங்களில் ஊறிப் போயிருக்கும் இந்திய மனங்கள், சோதனைகளைப் பார்க்கும் கண்ணோட்டம் என்ன?

சமாளிக்க முடியாத ஒரு பலமான எதிரியின் கைகளில் சக்கிக்கொண்டது போலவும், பெருகி ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது போலவும், நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இப்படி சோதனைகளைப் பற்றிய எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஒரு அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். இது ஓர் ஆபத்தான மனநிலை.

சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ் மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவற்றைத் தட்டியெழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதை நாம் நம்ப வேண்டும்.

நமது சொந்த சக்திக்கு  மீறியதாய்த் தோன்றும் சோதனைகள் வரும்போது, இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும் நம்மில் வளரவேண்டும். சின்ன வயதில் நமக்குச் சொல்லித் தந்த 'காவல் சம்மனசு' கதைகள், வெறும் கற்பனைக் கதைகளா? அல்லது, நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அடையாளங்களா? சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படையான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.

நாம் வாழும் உலகில் நல்லவைகளும், ஆக்கப்பூர்வமான செயல்களும் நடக்கின்றன. தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், நமது செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி, என, அனைத்துத் தொடர்புச் சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக, கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை, இந்தக் கோரங்கள்! ஆனால், வாழ்க்கையில் இவை உண்டாக்குவது, விபரீதங்கள். இவற்றையே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும்போது, "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது.

2015ம் ஆண்டின் இறுதி நாளன்று மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், 'Te Deum' என்ற நன்றி வழிபாட்டை முன்னின்று நடத்தினார். அப்போது, அவர் வழங்கிய மறையுரையில், ஆண்டு முழுவதும் நடந்த நல்லவற்றை ஊடகங்கள் வெளியிடாமல் போனது குறித்து, தன் வருத்தத்தை வெளியிட்டார்:

"நாம் கடந்துவந்த இவ்வாண்டில், பல நாட்கள், வன்முறை, மரணம், அப்பாவி மக்களின் சொல்லொண்ணாத் துயரம், சொந்த நாடுகளைவிட்டு வெளியேறும் புலம் பெயர்ந்தோர் என்று, பிரச்சனைகளால் நிறைந்திருந்தன. ஆயினும், நன்மைத்தனம் நிறைந்த பெரும் செயல்கள், அன்பு, ஆதரவு ஆகியவை நிறைந்த நாட்களும் இருந்தன. இவை, தொலைக்காட்சி செய்திகளாக வெளிவரவில்லை. நல்ல விடயங்கள் தலைப்புச் செய்திகள் ஆவதில்லை. ஒரு சிலச் சூழல்களில் சக்தியிழந்து, தொலைந்துபோனதைப் போல் தெரிந்தாலும், நன்மைத்தனம் எப்போதும் வெல்லும்" என்று  திருத்தந்தை, 2015ம் ஆண்டு இறுதிநாளன்று கூறினார். ஊடகங்கள் சொல்வதை உண்மையென்று நம்பினால், உள்ளத்தில் நம்பிக்கை குறைந்துபோகும். எனவே, ஊடகங்களில் வெளியாவதை முழுவதும் உள்வாங்க வேண்டாம் என்று இளையோரிடம் அவ்வப்போது கூறி வருகிறார், திருத்தந்தை.

ஊடகங்கள் வழியே ஓர் இயலாத்தன்மை நமக்கு ஊட்டப்படும்போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான், நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு விரக்தி நம்மில் வளர்வது பெரும் சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை வென்றதும், நமக்குச் சொல்லித் தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

இயேசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகங்களை, சிறு வயதில் பார்த்திருக்கேன். அந்த நாடகங்களில் எல்லாம் அவர் சோதிக்கப்பட்ட காட்சி கட்டாயம் இருக்கும். அந்தக் காட்சிகளில், சாத்தான், கருப்பு உடையுடன், முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, பயங்கரமாய் சிரித்துக்கொண்டு வரும். பலமுறை நான் அந்தக் காட்சியைப் பார்த்து பயந்திருக்கிறேன். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது அதை விரட்டி அடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்க இருக்கும் சாத்தான்களும், அவை கொண்டு வரும் சோதனைகளும் பயத்தில் நம்மை விரட்டுவதற்கு பதில், ஆர்வமாய் நம்மை கவருகின்றன என்பதுதான் உண்மை. சாத்தான்களும் அவை கொணரும் சோதனைகளும் அவ்வளவு அழகானவை. இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் நல்ல சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி சாத்தான் இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகளை அதிகமாக்கிக்கொள்ளும்போது தானே, அவற்றை எவ்வழியிலாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற சோதனைகளும் அதிகமாகும்?

சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகானது. "நீர் இறைமகன் என்றால், இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்ற சவாலை சாத்தான் முன்வைக்கிறது. சிறுவர்கள் விளையாடும்போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனாய் இருந்தால்... இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அச்சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விடும். இதற்குப் பயந்து, வீர சாகசங்கள் செய்து, அடிபட்டுத் திரும்பும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான்.

"நீர் இறை மகன் என்றால்..." என்று சொல்லும்போது, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என, சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இறைமகன் என்பதை நிரூபிக்க, நிலை நாட்ட, புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுயநலத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதுமை செய்ய வேண்டும்.

தன் சக்தியை நிலைநாட்ட புதுமைகள் செய்பவர்கள், வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்கமுடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது. தன் சுயநலனுக்கு, சுயதேவைக்குப் புதுமைகள் செய்வது, புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.

இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலும் அழகானது. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்மப் பசி தீர்க்கும் உணவைப்பற்றி பேசினார். “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை”  என்று, மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார் இயேசு. (இணைச்சட்டம் 8:3)

தன் சொந்த பசியைத் தீர்த்துக்கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகள் திறமைகள் எதற்கு? சுயத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மட்டுமா? சிந்திக்கலாம், இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகை வென்று, அதை தந்தையிடம் ஒப்படைக்கத்தானே இயேசு மனுவுருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! அப்படி இயேசு உலகை வெல்லவேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்யவேண்டும். சாத்தானோடு சமரசம்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது,  "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.

தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை அவை முன் சரணடைந்திருக்கிறோம்? இப்படி சமரசம் செய்வதே, 'அட்ஜஸ்ட்' செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.

 

மூன்றாவது சோதனை? இறைமகன் உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகை காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்கவேண்டும். உடனே, வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையை தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம், தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஓர் ஒத்திகை போல இது அமையும். எருசலேம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.

30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமானப் பணி, இறுதி 3 நாட்கள் கொடிய வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் தேவையில்லை. ஒரு நொடிப்பொழுது போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும்.

விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானைக் கடினமாக விரட்டியடிக்கிறார்.

மூன்றாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. முதல் இரு சோதனைகளிலும், சாத்தான் வெறும் ஆலோசனைகள் சொல்ல, சாத்தானின் வாயடைக்க இயேசு இறை வாக்குகளைப் பயன்படுத்துகிறார். மூன்றாவது சோதனையில் அலகை இறை வார்த்தையைப் பயன்படுத்தி ஆலோசனை வழங்குகிறது. சாத்தானுக்கு வேதம், விவிலியம் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. "Even the devil can quote the Bible" என்ற பழமொழி உண்டு.

வேதங்கள், வேத நூல்கள் உட்பட நல்லவை பலவும், பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஓர் உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதிமன்றங்களில் விவிலியத்தின் மீது அல்லது பிற வேத நூல்களின் மீது சத்தியப் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி.

கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுருக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மைக் கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தவக்காலம் நல்லதொரு நேரம்.

நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், மேன்மைதரும் மாற்றங்களை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கும் வசந்தகாலமாக விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கு இறைவனிடம் துணிவை வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.