2016-02-13 15:10:00

கிறிஸ்தவத் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருள்கள்


பிப்.13,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்களும் சந்தித்துப் பேசிய பின்னர், பரிசுப் பொருள்களைப் பரிமாறிக் கொண்டனர். மேற்குக்கும், கிழக்குக்கும் இடையே ஆழமான உறவுகளின் அடையாளங்களாக இவை இருந்தன. அலெக்சாந்திரியாவின் 5ம் நூற்றாண்டு பேராயரும், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளில் போற்றப்படுபவருமான புனித சிரில் அவர்களின் திருப்பண்டம் வைக்கப்பட்டுள்ள ஒரு பேழை மற்றும் திருப்பலி பாத்திரம் ஒன்றை, திருத்தந்தை, முதுபெரும் தந்தைக்குப் பரிசாக அளித்தார். முதுபெரும் தந்தையும், Kazan அன்னை மரியா திருவுருவப் படத்தை, திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருவுருவப்படத்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு நட்புறவின் அடையாளமாக, 2004ம் ஆண்டில் வத்திக்கான், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையிடம் வழங்கியது. பைஜான்டைன் மரபில் மிக அழகாக அமைந்துள்ள இந்த அன்னை மரியா, புதுமைகள் பல ஆற்றுபவராக ஆர்த்தடாக்ஸ் சபையால் போற்றப்படுகிறார். குறிப்பாக, 17ம் நூற்றாண்டில் இரஷ்யர்கள் போரில் வெற்றி பெறுவதற்கு இந்த அன்னை மரியே காரணம் என்ற நம்பிக்கை இரஷ்யர்களிடம் உள்ளது. இச்சந்திப்பில் பரிசுகள் பரிமாறப்பட்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முதுபெரும் தந்தை கிரில் அவர்களும், மற்றோர் அறைக்குச் சென்றனர். அங்கு எளிய மர நாற்காலியில் அமர்ந்து, இருவரும் இணைந்து வெளியிட்ட முப்பது பத்திகள் கொண்ட அறிக்கையில் கையெழுத்திட்டனர். அப்போது கியூபா நேரம் மாலை 4.30 மணியாக இருந்தது. அவ்வறிக்கைகளை இருவரும் ஒருவர் மற்றவருக்கு அளித்தனர். பின்னர் அங்கிருந்த இவ்விரு திருஅவைகளின் தலைவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். திருத்தந்தை, ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் பரிசுப்பொருள்களை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.