2016-02-12 16:00:00

நம்பிக்கைச் செய்தியுடன் மெக்சிகோவுக்கு திருத்தந்தை


பிப்.12,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டிற்கான தனது முதல் திருத்தூதுப் பயணத்தை, இவ்வெள்ளி காலை 7.45 மணிக்கு உரோம், ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தொடங்கினார்.

கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானா ஹோசே மார்ட்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் முதலில் சென்றிறங்கும் திருத்தந்தை, அங்கு ஏறக்குறைய மூன்று மணி நேரம் தங்கி, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் மீண்டும் ஹவானாவிலிருந்து மெக்சிகோவுக்குச் செல்கிறார்.

உரோம் நகரில் விமானத்தில் ஏறியவுடன் இத்தாலி அரசுத்தலைவர் உட்பட, தான் கடந்து செல்லும் நாடுகளான, பிரான்ஸ், இஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும், பஹாமாஸ் அரசுகளின் தலைவர்களுக்கு, வாழ்த்தும் செபமும் நிறைந்த தந்திச் செய்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலி அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களுக்கு அனுப்பிய செய்தியில், தான் நம்பிக்கைச் செய்தியைக் கொண்டு செல்வதாகவும், மெக்சிகோ தலத்திருஅவையின் மறைப்பணியை ஊக்குவிப்பதற்கு இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மெக்சிகோ திருத்தூதுப் பயணத்தில், மெக்சிகோ நகர், குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலம், இன்னும், அந்நாட்டில் மிகவும் வறிய மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நகரங்களிலும் திருத்தந்தை தனது பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார்.

மெக்சிகோவில் பிப்ரவரி 12, இவ்வெள்ளி முதல், பிப்ரவரி 17 புதன் வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் இத்திருத்தூதுப் பயணம், திருத்தந்தையின் 12வது வெளிநாட்டு மற்றும் திருத்தந்தையரின் 149வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணமாக அமைகின்றது.

“இறைஇரக்கம் மற்றும் அமைதியின் தூதுவர்” என்ற தலைப்பில் நடைபெறும் இத்திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து பிப்ரவரி 18, வியாழன் பிற்பகல் 2.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை Kirill, இவ்விரு தலைவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹவானா சந்திப்பு,  கிறிஸ்தவத்தில் 1053ம் ஆண்டில் ஏற்பட்ட மாபெரும் பிரிவினையைக் குணப்படுத்துவதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது., 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.