2016-02-11 15:27:00

நாசரேத்து பசிலிக்காவில் 24வது உலக நோயாளர் நாள் திருப்பலி


பிப்.11,2016. நாம் கொண்டாடிவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கும் இரக்கத்தை வெளிக்கொணர தகுந்ததொரு காலமாக உள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 11ம் தேதி, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் லூர்து நகர் அன்னை மரியா திருநாளன்று, 24வது உலக நோயாளர் நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, புனித பூமியின் நாசரேத்தில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பசிலிக்காவில் திருப்பலியாற்றிய, நலப்பணியாளர் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் சிக்மண்ட் சிமோவ்ஸ்கி (Zygmunt Zimowski) அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

கடந்த 162 ஆண்டுகளாக, லூர்து நகர் அன்னை மரியாவைக் கொண்டாடிவரும் திருஅவை, 1992ம் ஆண்டு முதல், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களின் முயற்சியால், இந்நாளை, உலக நோயாளர் நாளாகவும் சிறப்பித்து வருகிறது என்பதை, பேராயர் சிமோவ்ஸ்கி அவர்கள், தன் மறையுரையில் நினைவு கூர்ந்தார்.

'வார்த்தை மனுவுருவான' கோவிலில் கூடியிருக்கும் நாம், உலகத் துயரங்களில், குறிப்பாக, நோயாளிகளின் துயரங்களில் நம்மையே இணைக்க அழைக்கப்படுகிறோம் என்று பேராயர் சிமோவ்ஸ்கி அவர்கள் எடுத்துரைத்தார்.

தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவிய அன்னை மரியாவைப் போல, இந்த இரக்கத்தின் யூபிலி காலத்தில், நாமும், தேவையில் இருப்போரை, நோயுற்றோரை தேடிச்சென்று உதவுவோமாக என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக நோயாளர் நாளுக்கென விடுத்தச் செய்தியில் கூறியுள்ளதை, பேராயர் சிமோவ்ஸ்கி அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.