2016-02-11 15:14:00

இது இரக்கத்தின் காலம்–இயற்கையில் அர்த்தமின்றி எதுவுமே இல்லை


அக்காலத்தில் நாலந்தா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படிப்பதற்காக ஓர் இளைஞர் சென்றார். ஆசிரியர்கள் அம்மாணவருக்கு ஒரு தேர்வு வைத்தனர். தம்பி, நீங்க உடனே புறப்பட்டு, இங்கே பக்கத்துல இருக்கிற கிராமங்களுக்கும், அங்கிருக்கின்ற மலையடிவாரங்களுக்கெல்லாம் போங்க, எல்லா இடங்களையும் சுற்றி வாருங்க.. அப்படி சுற்றிவிட்டுத் திரும்பிவரும்போது, மருத்துவக் குணமே இல்லாத ஒரு செடியைத் தேடிக் கண்டுபிடிச்சு, அதை இங்கே எடுத்துக்கிட்டு வாங்க.. என்று கூறினர். சரி என்று சொல்லி புறப்பட்டார் இளைஞர். காடு மேடெல்லாம் சுற்றி அலைந்த அந்த இளைஞர், கடைசியாக, வெறுங்கையோடு திரும்பி வந்தார். அவரிடம் ஆசிரியர்கள், தம்பி, நீங்க,  மருத்துவப் படிப்புக்கு ஏற்றவர்தான். உங்களை அனுமதிக்கிறோம், வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறினர். ஜீவகன் என்ற அந்த மாணவர்தான், பிற்காலத்தில் இந்திய மருத்துவத்துக்குப் பெருந்தொண்டு ஆற்றியவர், மருத்துவத்தில் நிறைய ஆய்வுகள் நடத்தியவர், புத்தருக்கே மருத்துவம் பார்த்தவர். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காகவே பலர் புத்த மதத்தில் சேர்ந்தனர் என்று சொல்லப்படுகின்றது. நேயர்களே, இந்தப் பூமியிலுள்ள எல்லாச் செடி கொடிகளுக்குமே ஏதோ ஒரு மருத்துவக் குணம் இருக்கத்தான் செய்கிறது. அவற்றின் மருத்துவக் குணம் என்னவென்று மனிதர் அறிவதற்கு முன்பே பல செடி கொடிகள் அழிந்து விடுகின்றன. இயற்கையில் எதுவுமே அர்த்தமில்லாமல் இல்லை. ஆனால் மனிதர்தான் அர்த்தமில்லாமல் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கின்றனர், அதேநேரம் அதன் பலனையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்(தென்கச்சி சுவாமிநாதன்). இது இரக்கத்தின் காலம். இக்காலம், இயற்கையிடம் கருணையுடன் நடந்துகொள்ள விண்ணப்பிக்கிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.