2016-02-10 15:56:00

மறைவாகச் செய்யப்படும் தர்மங்களே, இறைவனுக்கு விருப்பம்


பிப்.10,2016. நெருங்கிவரும் தேர்தல்களை மனதில் கொண்டு மேற்கொள்ளப்படும் தர்மங்கள், உண்மையிலேயே தர்மங்களா? அல்லது, தங்களை உயர்த்திக்கொள்ள செய்யப்படும் முயற்சிகளா? என்ற கேள்வியை, மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், திருநீற்றுப் புதனன்று எழுப்பினார்.

தர்மம், பிறரன்புச் சேவை என்ற பெயர்களுடன் அரசியல் தலைவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறித்து தன் ஐயங்களை வெளிப்படுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், மறைவாகச் செய்யப்படும் தர்மங்களே இறைவனிடமிருந்து கைம்மாறு பெறும் தகுதியுடையவை என்று எடுத்துரைத்தார்.

செபம், தவம், தர்மச் செயல்கள் என்ற உன்னத முயற்சிகளுக்கு, தவக்காலம் தகுந்த தருணம் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், இறைவனோடும், அடுத்தவரோடும் ஒப்புரவாவதற்கும் இந்தக் காலம் அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் கொண்டாடப்படும் தவக்காலத்தில், பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிப்பது குறித்து, கர்தினால் தாக்லே அவர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.