2016-02-10 15:35:00

பொம்பெய் இளையோருக்கு திருத்தந்தையின் தவக்காலச் செய்தி


பிப்.10,2016. அன்பு இளையோரே, மனிதர்கள் காணவேண்டும் என்ற எண்ணத்துடன் உங்கள் நற்செயல்களை மேற்கொள்ளவேண்டாம் என்று இயேசு கூறியது, உங்கள் தவக்கால முயற்சிகளை வழிநடத்துவதாக என்று, ஓர் ஒலிச் செய்தி வடிவில், பொம்பெய் இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசினார்.

பிப்ரவரி 10, இப்புதனன்று ஆரம்பமாகியுள்ள தவக்காலத்தையொட்டி, 'KeepLent' அதாவது, 'தவக்காலத்தைக் கடைப்பிடியுங்கள்' என்ற பெயரில் பொம்பெய் இளையோர் பணித்துறை, சமூக வலைத்தளங்கள் வழியே, இளையோருக்கு செய்திகள் அனுப்பும் முயற்சியைத் துவக்கியுள்ளது. இந்த முயற்சியின் முதல் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஒலிச் செய்தி இளையோரைச் சென்றடைந்தது.

நற்செயல்களை ஆற்றும்போது மனிதர்களின் பாராட்டுக்கள் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சோதனை அனைவருக்கும் எழுகிறது; இருப்பினும், அதைவிட்டு விலகி, இறைவனின் பார்வையில் நாம் பெருமைபெற வேண்டும் என்பதை, நம் தவக்கால நடவடிக்கைகளின் அளவுகோலாக இயேசு தந்துள்ளார் என்று, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாம் செய்யும் செபம், தவம், பிறரன்புச் சேவை அனைத்துமே இறைவனை மகிழ்விக்கும்படி இருப்பதே நம் தவக்கால முயற்சியாக இருக்கட்டும் என்று திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 60 அல்லது 90 நொடிகள் நீடிக்கும் இந்த சமூக வலைத்தள முயற்சியில், பல்வேறு கத்தோலிக்கத் தலைவர்கள், கல்வியாளர்கள், அருள் பணியாளர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.