2016-02-10 15:16:00

புதன் மறைக்கல்வி உரை – இயற்கை வளங்கள் நீதியாகப் பகிரப்பட...


பிப்.,10,2016. இத்தாலியில் தற்போது குளிர்காலம் எனினும், உரோம் நகரில் குளிர் ஓரளவு மிதமாகவே இருந்து வருவது ஆறுதல் தரும் ஒரு செய்தியாகும். இப்புதன் காலையிலும் சூரியன் மிகப்பிரகாசமாக தன் கதிர்களை வீசிக்கொண்டிருந்தாலும், குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டுதான் இருந்தது. இந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல், திருப்பயணிகள் கூட்டம் பெருமெண்ணிக்கையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, 'நீதி மற்றும் பகிர்ந்து வாழ்தலின்' முக்கியத்துவம் இந்த ஜூபிலி ஆண்டில் எவ்விதம் உணரப்படுகிறது என்பது குறித்து தன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பழங்காலத்திலிருந்தே யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பதை, விவிலியத்திலிருந்து நாம் அறிய வருகிறோம். கடன்கள் மன்னிக்கப்படவேண்டும், அடிமைகள் விடுவிக்கப்படவேண்டும் என கடவுள், லேவியர் நூலில் வழங்கிய அறிவுரையின்படி இஸ்ரயேல் மக்கள் சிறப்பித்த இந்த யூபிலி ஆண்டு, அவர்களின் சமூக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் ஓர் உன்னத நேரமாக சிறப்பிக்கப்பட்டது. யூபிலி ஆண்டு என்பது, பொது மன்னிப்பின் காலம். இறைவனின் புனித மக்கள், தங்களுக்கேயுரிய சுதந்திரம் எனும் இயல்பு நிலைக்குத் திரும்ப, யூபிலி ஆண்டு காலத்தில் அழைப்புப் பெறுகிறார்கள். பூமியின் செல்வங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை ஊக்குவித்து, ஏழ்மைக்கும் சமமற்ற தன்மைக்கும் எதிராக நாம் போராடுவதன் வழியாக நம் மன்னிப்புத் தன்மையை நாம் செயல்படுத்த வேன்டும். இறைவனுக்குச் சொந்தமான இந்த உலகம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாமோ, முடிவற்ற வாழ்வை நோக்கிச் செல்லும் பாதையில் இங்கு புதியவர்கள், மற்றும் தற்காலிகமாகத் தங்கிச் செல்பவர்கள். இவ்வுலகில் இறைவனின் பணியாளர்களாகிய நாம், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பூமியை, மனிதாபிமானம் மிக்கதாகவும், வாழ்வதற்கு இயைந்ததாகவும் மாற்றும்படி அழைப்புப் பெறுகிறோம். நம் உழைப்பின் முதல் கனிகளை இறைவனுக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்ற பண்டைகாலப் பழக்கமும் இந்த யூபிலி ஆண்டில் நம் முன் வருகிறது. தேவையில் இருப்போருடன் தாராள மனதுடன் செயல்படவும், ஏழ்மையை ஒழிப்பதில் உதவவும், ஒருமைப்பாடு, சகோதரத்துவம், நீதி ஆகியவைகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு சமூகத்திற்குப் பங்காற்றவும், யூபிலி ஆண்டில் நாம் அழைப்புப் பெறுகிறோம்.

இவ்வாறு, தன் புதன் மறைபோதகத்தை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வியாழன், பிப்ரவரி 11ம் தேதி, லூர்து அன்னை திருவிழா அன்று 24வது உலக நோயாளர் தினம் சிறப்பிக்கப்படுவதைக் குறித்தும் நினைவூட்டினார். இந்த நாளுக்கான செய்தியில், கானாவூர் திருமணத்தின்போது அன்னை மரியா கூறிய 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்ற வார்த்தைகள் குறித்து தியானித்துள்ளதையும் எடுத்துக் கூறிய திருத்தந்தை, நோயாளிகளுக்காகச் செபிக்கவும், அவர்கள் நம் அன்பை உணரச் செய்யவும் ஒவ்வொருவரும் முன்வருமாறு அழைப்புவிடுத்தார். மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.