2016-02-10 15:58:00

திருத்தந்தை,முதுபெரும் தந்தை சந்திப்பு - இஸ்லாமியர், யூதர்


பிப்.10,2016. மெக்சிகோ நாட்டிற்குச் செல்லும் வழியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, கிரில் அவர்களைச் சந்திக்கவிருப்பதை, இரஷ்யாவில் வாழும் இஸ்லாமியரும், யூதர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

ஒவ்வொரு சந்திப்பும் மேலான புரிதலைக் கொணர்வதற்கு வழியாக அமையும் என்று கூறிய, இரஷ்ய இஸ்லாமியத் தலைவர், Talgat Tadzhuddin அவர்கள், இச்சந்திப்பு கிறிஸ்தவ ஒற்றுமைக்கு மட்டும் அல்ல, உலக ஒற்றுமைக்கும் வழியமைக்கிறது என்று கூறினார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் இவ்விரு தலைவர்களின் சந்திப்பில் பேசப்படும் என்பது, கிறிஸ்தவ இஸ்லாமிய ஒற்றுமையை விரும்பும் அனைவரும் வரவேற்கும் ஒரு செய்தி என்று இஸ்லாமியத் தலைவர், Tadzhuddin அவர்கள் எடுத்துரைத்தார்.

இரஷ்ய யூதர்கள் சமுதாயத்தின் சார்பில் பேசிய ரபி Zinovy Kogan அவர்கள், தற்போதையத் திருத்தந்தை, கிறிஸ்தவருக்கும், யூதருக்கும் இடையே உரையாடலை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறார் என்று கூறி, திருத்தந்தைக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தைக்கும் இடையே நிகழும் சந்திப்பிற்கு, யூதர்களின் ஆசீர் உண்டு என்று வாழ்த்து கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.