2016-02-10 15:49:00

சிரியா கிறிஸ்தவர்களின் பாடுகளில் உலகக் கிறிஸ்தவர்கள் பங்கு


பிப்.10,2016. தன் பாடுகளின் போது, நண்பர்களின் துணையையும், உதவியையும் ஆண்டவர் இயேசு தேடியதைப் போல, எங்கள் துயரங்களில் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளின் ஆதரவை நாங்கள் தேடி நிற்கிறோம் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்களும், மேல்கத்திய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, மூன்றாம் கிரகொரியஸ் இலகாம் அவர்களும் வெளியிட்டுள்ள தவக்காலச் செய்தியில், சிரியாவில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் ஆதரவு தேவை என்று விண்ணப்பித்துள்ளனர்.

மோசுல் நகரும், நினிவே பள்ளத்தாக்கும் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்று கூறும் முதுபெரும் தந்தை, சாக்கோ அவர்கள், இந்தப் புழுதியிலிருந்து மீண்டும் உயிர்ப்பை அனுபவிக்க உலகக் கிறிஸ்தவர்களின் செபமும், உதவியும் தேவை என்று கூறியுள்ளார்.

கிறிஸ்து மேற்கொண்ட சிலுவைப் பாதையில் உதவிகள் செய்த சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், வெரோனிக்கா, மற்றும் அவருக்காக அழுத எருசலேம் அன்னையர் ஆகியோரைப் போல, சிரியா நாட்டுக் கிறிஸ்தவர்களின் பாடுகளிலும் உலகக் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும் என்று, முதுபெரும் தந்தை இலகாம் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.