2016-02-10 15:06:00

இது இரக்கத்தின் காலம்.. – நன்மைகளை மட்டுமே விட்டுச் செல்வோம்


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டார். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் சிரமப்பட்டு அவர் அந்த இடத்திற்குச் சென்று விட்டார். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஓர் அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்தப் பம்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவர் யோசித்தார். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒருவேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக, தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவர் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தார். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவர் மனம் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதேபோல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.