2016-02-10 14:52:00

அமைதி ஆர்வலர்கள் : 2007ல் நொபெல் அமைதி விருது-பாகம்1


பிப்.10,2016. புவி அளவுக்கு மீறி வெப்பமடைந்து வருவதன் விளைவாக உலகைப் புரட்டிப்போடும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத நாடுகளே இன்று இல்லை. புவி வெப்பமடையக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கு புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு இன்றைய நாகரிகத்தை கட்டியெழுப்பியது, காடுகளை அழிப்பது, நிலப் பயன்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவந்ததும்தான் காரணம் என்றாலும், முன்னேற்றம், வளர்ச்சி என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டு எழுப்பப்பட்ட பொருளாதார, அரசியல்  போக்குகளும், தத்துவங்களும், செயல்பாடுகளும்தான் முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  காலநிலை மாற்றம், வெப்பநிலை மாற்றம் என்றும் அழைக்கப்படும் பருவநிலை மாற்றத்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் 48 விழுக்காட்டு உணவு தானிய உற்பத்தி குறையும். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய கடல் நீரில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், கடல் பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதுபோல், வெப்பநிலை உயர்ந்தால், அடுத்த 20 ஆண்டுகளில் 20 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தியை இழக்க நேரிடும். உலக பருவநிலை மாற்றத்துக்கு காரணமான 13.5 விழுக்காட்டு வாயுக்கள், விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களில் இருந்து வெளியேறுகின்றன. உலகிலேயே இந்தியாவில்தான் 28 விழுக்காடு அளவுக்கு வேளாண் பயிர்களில் இருந்து வாயுக்கள் வெளியேறுகின்றன. இன்றையச் சூழலில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தால், 50 இலட்சம் டன் கோதுமை உற்பத்தியை இழக்க நேரிடும். இதன் மதிப்பு ஐயாயிரம் கோடி ரூபாய். கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை, உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம். பெட்ரோல், டீசல் ஆகியவை வாகனங்களில் எரிக்கப்படும் போது வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு அளவு 25 விழுக்காடு. இந்த வாயுவைவிட மீத்தேன் 20 மடங்கு வெப்பத்தை அளிக்கும். நெற்பயிரில் இருந்தும், அங்ககப் பொருட்கள் மண்ணில் மட்கும் போதும் மீத்தேன் வாயு வெளிப்படுகிறது. இவ்வாறு கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், ‘வேளாண்மையில் பருவநிலை மாறுபாட்டின் விளைவுகள்’என்ற தலைப்பில் நடைபெற்ற பயிலரங்கத்தில் சொல்லப்பட்டது. காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு ஐ.நா. தலைமையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பரில் பாரிஸ் நகரில், இது குறித்த உச்சி மாநாடு நடைபெற்றது.

காலநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு Albert Arnold Gore, Jr. அவர்களும், IPCC என்ற காலநிலை மாற்றம் குறித்த ஒரு பன்னாட்டுக் குழுவும் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, 2007ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது. Al Gore அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல்வாதி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர், 1992ம் ஆண்டு முதல், 2000மாம் ஆண்டுவரை, அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளிண்டன் அரசில், உதவி அரசுத்தலைவராகப் பணியாற்றியவர். இந்த உலகம் சந்திக்கும் மிக நெருக்கடியான காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகளை வரலாறு மன்னிக்காது என்று கூறியவர் Al Gore. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பும்(UNEP), ஐ.நா.வின் உலக வானியல் ஆய்வு நிறுவனமும்(WMO) இணைந்து 1988ம் ஆண்டில் IPCC என்ற The Intergovernmental Panel on Climate Change குழுவை(IPCC) உருவாக்கியது. காலநிலை மாற்றத்தில் மனிதரின் பங்கை அறிவியல்முறையாக மதிப்பீடு செய்வதற்காக இக்குழுவை இவ்விரு ஐ.நா. நிறுவனங்களும் அமைத்தன. IPCC குழு, இந்தத் தனது பணியை ஆற்றுவதற்கு, உலக அளவில் ஆயிரக்கணக்கான அறிவியலாளர்களின் முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகின்றது. இக்குழுவில் அறிவியலாளர்களுடன், இப்பூமியில் மனிதரின் நடவடிக்கைகளைக் கணிக்கும் காலநிலை, இயற்பியல் மற்றும் வேதியல் நிபுணர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வழங்கும் அறிக்கைகள் விமர்சனப் பார்வையோடு பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே பொதுவில் வெளியிடப்படும். காலநிலை மாற்றம் குறித்த எந்த ஓர் அறிக்கையையும், மிகவும் கவனத்துடன் பரிசீலித்த பின்னரே IPCC குழு, தனது இறுதி அறிக்கையை வெளியிடுகிறது. இதனால் இக்குழுவிலுள்ள நிபுணர்களை மூன்று குழுக்களாக இது பிரித்துள்ளது. முதல் நிபுணர்கள் குழு, இயற்பியல் அறிவியல் குறித்த கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்காலங்களைப் பரிசீலிக்கின்றது. இரண்டாவது நிபுணர்கள் குழு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள்  குறித்து ஆய்வு செய்கின்றது. மூன்றாவது குழு, கோட்பாட்டு அளவில், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்குரிய முறைகளை ஆய்வு செய்கின்றது.

IPCC நடவடிக்கைகளில் தன்னார்வலர்களாகப் பணிபுரியும் அறிவியலாளர்களுடன், ஊதியத்துடன் செயல்படும் ஒரு சிறிய குழுவும் உண்டு. தற்போது IPCC குழுவில் 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உள்ளது. இதன் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை(AR5), 2013ம் ஆண்டு செப்டம்பருக்கும், 2014ம் ஆண்டு நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டது. மனித சமுதாயம் உயிர் வாழ வேண்டுமெனில், மிகவும் கருத்துடன் புதிய வழியில் நாம் சிந்திக்க வேண்டியது அவசியம் என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் 1954ம் ஆண்டிலே சொன்னார். காலைநிலை மாற்றம் குறித்த விவகாரம் கண்டுகொள்ளப்படாவிட்டால், அது மற்ற விவகாரங்களை அமுக்கிவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு, நம்மால் ஆற்ற இயன்றதை முதலில் செய்வோம். இவ்வாறு உலக முயற்சிகளில் நம் பங்கீடும் ஒன்றாக இணையும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.