2016-02-09 15:46:00

வட கொரியா ஏவுகணையைச் செலுத்தியிருப்பது குறித்து ஆயர் கவலை


பிப்.09,2016. வட கொரியா, ஏவுகணையைச் செலுத்தி, செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது கவலை தருவதாக உள்ளது என்று பிலிப்பைன்ஸ் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

வட கொரியா நடத்தும் அழிவுக்குரிய செயல்கள் அதிகரித்து வருகின்றன என்றுரைத்த, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் பொது விவகார ஆணைக்குழுத் தலைவர் பேராயர் Ramon Arguelles அவர்கள், இத்தகைய நிகழ்வுகள் பாராட்டப்படும்பொழுது, பல நாடுகள் இதேபோல் செய்யத் துணியும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் ஏவுகணைகள் மட்டும் பிரச்சனை அல்ல, ஆனால் அவற்றை ஏவுவதற்குத் தூண்டிய அறிவற்ற மனங்களும் பிரச்சனை என்றும் பேராயர் Arguelles அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிப்ரவரி 7, கடந்த ஞாயிறன்று வட கொரியா, ஏவுகணையைச் செலுத்தி, செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இதற்கு, ஐ.நா. உட்பட அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா போன்ற நாடுகள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஏவுகணை சோதனை செய்த வட கொரியா மீது ஐ.நா பாதுகாப்பு அவை புதிய பொருளாதாரத் தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளது

ஏற்கனவே கடந்த மாதம் 6ம் தேதி, அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக, உலக நாடுகள் மற்றும் ஐ.நா.வின் கடும் கண்டனத்திற்கு வட கொரியா ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வட கொரியா மீது பலதரப்பட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், 1 டன் எடையுள்ள, 'குவாங்மியாங்சோங்-4' ஏவுகணையை பிப்ரவரி 7ம் தேதி விண்ணுக்கு செலுத்தி, செயற்கைக்கோள் ஒன்றையும் நிலைநிறுத்தியுள்ளது. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.