2016-02-09 15:27:00

திருத்தந்தை பிரான்சிஸ் : மன்னிப்பதில் சோர்வடையாதீர்கள்


பிப்.09,2016. ஒப்புரவு அருளடையாளம், மன்னிப்பு வழங்குவதற்காக உள்ளது, இந்த அருளடையாளத்தை நிறைவேற்றும்போது, பாவத்திற்குப் பரிகாரம் வழங்க முடியவில்லை என்று நினைத்தாலும், மனம் வருந்தும் பாவியை மேலும் மேலும் துன்புறுத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக கப்புச்சின் துறவு சபை பிரதிநிதிகளுக்கு இச்செவ்வாய் காலை வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சகோதரராக, உங்களிடம் பேசுகிறேன் என்றும், உங்கள் வழியாக, சிறப்பாக, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அனைவரிடமும் பேசுகிறேன் என்றும் கூறினார்.

கப்புச்சின் சபை பாரம்பரியத்தில், மன்னிப்பு வழங்குவது ஒரு மரபாக உள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வருகிறவர்கள், தனது ஆன்மாவில் அமைதியையும், ஆறுதலையும், மன்னிப்பையும் தேடி வருகின்றனர், அவ்வாறு வருகிறவர்கள், தன்னை ஏற்கும் இறைத்தந்தையின் அன்பை உணர்வதற்கு உதவ வேண்டும் என்று கூறினார்.

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வருபவர், கடவுள் தன்னை உண்மையிலே அன்பு கூர்கிறார் என்று உணருவதற்கு, அதை வழங்கும் அருள்பணியாளர் உதவ வேண்டும் என்றுரைத்தார் திருத்தந்தை.

ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுகின்றவர்கள், திறந்த மனதோடும், திறந்த இதயத்தோடும், இறை மன்னிப்பை வழங்குவதில் ஒருபோதும் சோர்வடையாத கருவிகளாகவும், மனம் வருந்துபவரின் துன்பங்களைப் புரிந்து கொள்பவராகவும் இருப்பதை, தான் காண விரும்புகிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாங்களும் பாவிகள் என்பதையும், கடவுளின் மீட்பளிக்கும் இரக்கம் முதலில் தங்களுக்குத் தேவை என்பதையும் உணர்ந்தவர்களாக ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இரக்கத்தின் யூபிலி ஆண்டை முன்னிட்டு, கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்த, 'பாத்ரே பியோ' என்றழைக்கப்படும் பியெத்ரெல்சீனா நகர் புனித பயஸ், புனித லியோபோல்தோ மாந்திச் ஆகிய புனிதர்களின் திருஉடல்கள் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் பொது மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளவேளை, அச்சபையினருக்கு திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 10, திருநீற்றுப் புதனன்று, மாலை 5 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்கள் முன்னிலையில் நிறைவேற்றும் திருப்பலியின்போது, இரக்கத்தின் தூதுவர்களை உலகெங்கும் அனுப்பி வைப்பார்.

பிப்ரவரி 11ம் தேதி காலை 7.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவில், புதியவழி நற்செய்தி அறிவிப்புபணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள் நிறைவேற்றும் திருப்பலிக்குப் பின்னர் இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்களும் உரோம் நகரிலிருந்து அவரவர் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.