2016-02-09 15:34:00

ஒன்பது கர்தினால்கள் ஆலோசனை அவை கூட்டம்


பிப்.09,2016. திருப்பீட தலைமையகத்தின் சீர்திருத்தத்தில், பகிர்ந்து கொள்ளப்படும் அதிகாரம் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து கர்தினால்கள் ஆலோசனை அவை கூட்டத்தில் பேசப்பட்டதாக, திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

இச்செவ்வாயன்று நிறைவடைந்த, கர்தினால்கள் ஆலோசனை அவையின், இரண்டு நாள்கள் கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருப்பீடச் செயலகம் மற்றும் திருவழிபாட்டுப் பேராயம் மேலும் சிறப்பாக நடைபெறுவது குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கென ஓர் அவையும், நீதி, அமைதி மற்றும் குடிபெயர்பவர்க்கென ஓர் அவையும் உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக, அருள்பணி லொம்பார்தி அவர்கள் மேலும் கூறினார்.

திருப்பீட தலைமையகச் சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் ஒன்பது கர்தினால்கள் கொண்ட அவையின் 13வது கூட்டம், திருப்பீடத்தில், பிப்ரவரி 8,9 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தையின் தலைமையில் நடைபெறறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.