2016-02-08 16:47:00

திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை


பிப்.08,2016. அஞ்ச வேண்டாம், ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை வையுங்கள் என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு, கெனசரேத்து ஏரிக்கரையில் இயேசு தம் முதல் சீடர்களை அழைத்தது பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, மூவேளை செப உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரவெல்லாம் வலையை வீசி மீன்கள் ஒன்றும் அகப்படாமல், கரையில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது,  சீமோன் பேதுருவின் படகில் இயேசு ஏறி, கரையில் கூடியிருந்த மக்களுக்குப் போதித்தார். அதன்பின்னர், பேதுருவிடம், படகை ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் வலைகளை வீசச் சொன்னார் இயேசு.    பேதுருவும், இயேசுவின் வார்த்தைகளை நம்பி வலைகளை வீசினார், ஏராளமான மீன்களைப் பிடித்தார், அவரின் விசுவாசத்திற்குப் பலன் கிடைத்தது என்ற எண்ணங்களை திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

இந்தப் புதுமையைக் கண்ட பேதுரு, இயேசுவின் பாதத்தில் சரணடைந்தார், ஆண்டவரே நான் பாவி, என்னைவிட்டு அகலும் என்றார், இயேசு ஆண்டவர் என்பதையும், தான் தகுதியற்றவன் என்பதையும் பேதுரு நன்றாக உணர்ந்திருந்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.

அஞ்ச வேண்டாம், இதுமுதல் மனிதரைப் பிடிப்பவனாவாய் என்று இயேசு பேதுருவிடம் கூறினார், இயேசு பாவியாக அவரை விட்டுவில்லை, நோயாளி மருத்துவரிடம் சரணடைவதைவிட மேலாக பேதுரு சரணடைந்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், தனது மெக்சிகோ திருத்தூதுப் பயணத்தின்போது, கியூபாவில், இரஷ்ய முதுபெரும் தந்தை கிரில் அவர்களைச் சந்திப்பது பற்றியும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.