2016-02-08 16:10:00

சிறுவர், சிறுமியர் பாதுகாப்பு குறித்து திருப்பீடம் பரிந்துரை


பிப்.08,2015. சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை, கடந்த ஒரு வாரமாக உரோம் நகரில் நடத்திவந்த ஆலோசனைக் கூட்டங்களின் விளைவாக, அறிக்கையொன்றை, இத்திங்களன்று வெளியிட்டது.

பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமியர், திருஅவை அதிகாரிகளை அணுகும்போது, அவர்களுக்கு உரிய கவனத்தை உடனடியாக செலுத்த, திருத்தந்தை தலத்திருஅவை அதிகாரிகளுக்கு தகுந்த வழிமுறைகளை அனுப்பவேண்டும் என்றும், திருஅவையில் நிலவிவரும் இக்குற்றத்திற்கு மன்னிப்பு கோரும் உலக செப, தவ நாள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், இத்திருப்பீட அவை, பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இப்பரிந்துரைகளைப் பார்வையிடும் திருத்தந்தை, இன்னும் கூடுதலான வரைமுறைகளை உலகக் கத்தோலிக்கத் திருஅவைக்கு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓராண்டளவாக, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரியா, பசிபிக் தீவுகள், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, போலந்து, மத்திய அமேரிக்கா ஆகிய பகுதிகளின் ஆயர்களை, இத்திருப்பீட அவையின் உறுப்பினர்கள் சந்தித்து, சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, திட்டவட்டமான செயல்முறைகளை வகுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவையின் 13வது கூட்டம், திருப்பீடத்தில், பிப்ரவரி 8,9 ஆகிய இரு நாட்கள், திருத்தந்தையின் பங்கேற்புடன் நடைபெற்றுவருகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.