2016-02-08 17:06:00

கர்தினால் Rahi : அரசுத்தலைவரின்றி லெபனான், அழியும் நிலை


பிப்.08,2015.  தங்கள் உரிமைகளை மதிக்கும் ஒரு நாட்டில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பை மனதில் கொண்டு, நாட்டின் அரசுத் தலைவரை உடனடியாக தேர்வுச் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார், லெபனான் நாட்டு கர்தினால் Bechara Boutros al-Rahi.

கடந்த 20 மாதங்களாக லெபனன் அரசுத் தலைவர் பதவி, நிரப்பப்படாமலேயே இருப்பது குறித்து கவலையை வெளியிட்ட மாரொனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Boutros al-Rahi அவர்கள், லெபனனின் அரசியல் மற்றும் பாராளுமன்ற பிரிவுகள் ஒன்றிணைந்து அரசுத்தலைவரை தேர்வு செய்வதில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அரசியல் தலைவர்கள், பொது நலனை மனதில் கொள்ள வேண்டும் எனவும், மாரொனைட் வழிபாட்டுமுறையைச் சேர்ந்த ஒருவர் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அரசியலைப்பில் வரையறுத்துள்ளபடி, உடனடியாக இசைவு வழங்கப்பட்டு, தேர்வு இடம்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால்.

லெபனன் நாடு, அரசுத்தலைவர் இன்றி கடந்த 20 மாதங்களாக இயங்கிக் கொண்டிருப்பது, அந்நாட்டிற்கு மட்டுமல்ல, அந்நாட்டுடன் ஆன அனைத்துலக உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என, ஐ.நா. நிறுவனமும் தன் கவலையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.