2016-02-06 15:37:00

பிப்ரவரி 12 ஹவானா சந்திப்பு குறித்து ஆர்த்தடாக்ஸ் சபை


பிப்.06,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களுக்கும் இடையே இம்மாதம் 12ம் தேதியன்று இடம்பெறவிருக்கும் சந்திப்பு, மத்திய கிழக்கில் நசுக்கப்படும் கிறிஸ்தவர்கள் சார்பாக, ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை அதிகாரிகள் கூறினர்.

இவ்விரு தலைவர்களும் கியூபத் தலைநகர் ஹவானா, ஹோசே மார்ட்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் சந்திக்கவிருப்பது குறித்து, இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கான் அறிவித்த அதேநேரத்தில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் மாஸ்கோ தலைமையகத்தில், அச்சபையின் வெளியுறவுத் துறை இயக்குனர் பேராயர் Hilarion அவர்கள் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

இச்சந்திப்பு, கத்தோலிக்கத் திருஅவைக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் பதட்டநிலைகள் களையப்பட்டுவிட்டன என்பதன் அடையாளமல்ல என்றும் ஆர்த்தடாக்ஸ் பேராயர் Hilarion அவர்கள் தெரிவித்தார்.

உக்ரேய்னில் கிரேக்க கத்தோலிக்க சபை வளர்ந்து வருவது உட்பட சில விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன என்றும் தெரிவித்த பேராயர் Hilarion அவர்கள், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் பயங்கரவாதிகளால் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு ஒன்றிணைந்து பணிசெய்வதற்கு இச்சந்திப்பு உதவும் என்றும் கூறினார்.

ஆதாரம் : CNS/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.