2016-02-06 15:46:00

திருத்தந்தை,முதுபெரும் தந்தை Kirill சந்திப்பு,கியூபா மகிழ்வு


பிப்.06,2016. ஹவானாவில், இம்மாதம் 12ம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களும் சந்திக்கவிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக, கியூப அரசு அறிவித்துள்ளது.

திருத்தந்தைக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தைக்கும் இடையே இடம்பெறவிருக்கும் இத்தகைய சந்திப்பு முதன்முறை என்றும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு கியூபா அனைத்து உதவிகளையும் ஆற்றும் என்றும் கியூப அரசு உறுதியளித்துள்ளது.

அதேநேரம், புடாபெஸ்ட் பேராயரும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (CCEE) தலைவருமான கர்தினால் Péter Erdő அவர்கள், இச்சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை முதுபெரும் தந்தை Kirill அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

கிறிஸ்தவர்களுக்கிடையே ஒன்றிப்பு மற்றும் ஒன்றிணைந்த சாட்சியத்தை நோக்கிச் செல்வதற்கு, மேலும் ஒரு முயற்சியாக, இச்சந்திப்பை, ஐரோப்பியத் திருஅவை நோக்குகின்றது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Péter Erdő.

இச்சந்திப்பு நல்ல பலன்களைக் கொணர்வதற்கும், திருஅவையின் ஒன்றிப்பை நோக்கிய இந்த முக்கியமான நடவடிக்கைக்கும், சிறப்பாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்காகவும், ஆண்டவரிடம் செபிப்பதாக உறுதியளித்துள்ளார் கர்தினால் Péter Erdő.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.