2016-02-06 15:23:00

திருத்தந்தை, 'பாத்ரே பியோ' செபக் குழுக்கள் சந்திப்பு


பிப்.06,2016. பாவியின் காயங்களைக் குணமாக்கி, இதயத்தில் அமைதியை நிலைநிறுத்தும் இறைத்தந்தையின் அன்புப் பராமரிப்பின் உயிருள்ள சாட்சியாக, புனித 'பாத்ரே பியோ' அவர்கள், ஒப்புரவு அருளடையாளத் திருப்பணியின் வழியாகத் திகழ்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

'பாத்ரே பியோ' என்று அன்புடன் அழைக்கப்படும் பியெத்ரெல்சீனா நகர் புனித பயஸ், பதுவை நகரில் மறைப்பணியாற்றிய குரோவேஷிய நாட்டின் புனித லியோபோல்தோ மாந்திச் ஆகிய இரு புனிதர்களின் திருஉடல்கள் பிப்ரவரி 5 மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் பொது மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளன.

இத்திருப்பண்டங்களைக் காண வந்திருக்கும் 'பாத்ரே பியோ' செபக் குழுக்களின் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை, இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்தித்து உரையாற்றி, நோயாளிகளையும் ஆசிர்வதித்தார் திருத்தந்தை.

மக்களை வரவேற்று அவர்கள் பேசுவதைக் கேட்பதிலும், நம் ஆண்டவரின் மன்னிப்பின் நறுமணத்தை பரப்புவதற்கு நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பதிலும் 'பாத்ரே பியோ' அவர்கள், ஒருபோதும் சோர்வடைந்ததில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த நிகழ்வையொட்டி உரோம் நகருக்குத் திருப்பயணமாக வந்திருந்த விசுவாசிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, திருஅவையின் மாபெரும் வல்லமை செபம் என்றும், செபத்தை ஒருபோதும் கைவிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.

செபத்தில் ஒரே மனதாய்க் கூடியிருந்த அன்னை மரியா மற்றும் திருத்தூதர்கள் போன்று, திருஅவையும் செயல்பட்டால் மட்டுமே பலன்களைக் கொணர முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் திருப்பணியாளர்கள் என்று அறியப்படும் இவ்விரு புனிதர்களும், தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை ஒப்புரவு அருளடையாளப் பணிக்கென அர்ப்பணித்தனர் என்பதால், இவ்விருவரின் புனித பண்டங்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி, பிப்ரவரி 3ம் தேதி உரோம் நகருக்குக் கொணரப்பட்டு, தற்போது வத்திக்கானில் வைக்கப்பட்டுள்ளன.

'பாத்ரே பியோ' அவர்கள் வாழ்ந்தபோதே, 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் 'பாத்ரே பியோ' செபக்குழுக்களைத் தொடங்கினார்,

இவ்விரு புனிதர்களும் கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்தவர்கள்.  பிப்ரவரி 10ம் தேதி, திருநீற்றுப் புதனன்று, மாலை 5 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்கள் முன்னிலையில் நிறைவேற்றும் திருப்பலியின்போது, இரக்கத்தின் மறைப்பணியாளர்களை உலகெங்கும் அனுப்பி வைப்பார்.

பிப்ரவரி 11ம் தேதி காலை 7.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவில், புதியவழி நற்செய்தி அறிவிப்புபணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள் நிறைவேற்றும் திருப்பலிக்குப் பின்னர் இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்களும் உரோம் நகரிலிருந்து அவரவர் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.