2016-02-06 15:52:00

உலகளவில் 20 கோடிப் பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு


பிப்.06,2016. பெண்கள் மற்றும் சிறுமியரின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் கொடூரமான பழக்கம், அவர்களின் வாழ்வு, நலவாழ்வு, உரிமைகள் மற்றும் முழுமையான உடல் சக்தியைப் பாதிக்கின்றது என்று சொல்லி, இப்பழக்கத்தை 2030ம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கு ஐ.நா. அதிகாரிகள் உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

'பெண்கள் பிறப்புறுப்பைச் சிதைக்கும் முறைக்கு எதிரான பன்னாட்டு நாள், பிப்ரவரி 6, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் வெளியிட்ட செய்தியில், இக்கொடுமையான பழக்கத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

இன்று முப்பது நாடுகளில், பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியரின் எண்ணிக்கை, 20 கோடியைத் தாண்டியுள்ளது' என்று ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தக் கொடுமைக்கு எதிராக, ஐ.நா. நிறுவனம் பல முறை தீர்மானம் நிறைவேற்றியும், கடந்த, 2014ல் மட்டும், ஏழு கோடிச் சிறுமியர் மற்றும் பெண்கள், தங்களின் மதிப்பு மிக்க பிறப்புறுப்பை இழந்துள்ளனர் என்றுரைக்கின்றது ஐ.நா.  

பெண்களுக்கு எதிரான மிகக் கொடூரமான வன்முறையாகக் கருதப்படும், பிறப்புறுப்பைச் சிதைக்கும் சடங்கு, பல நாடுகளில், குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

மத நம்பிக்கை, சமூகப் பாதுகாப்பு, பயங்கரவாதிகள் கையில் சிக்காமல் காக்க... என பல காரணங்களுக்காக இந்தக் கொடுமை சிறுமியர் மற்றும் பெண்களுக்கு நடத்தப்படுவதாக, காரணங்கள் சொல்லப்படுகின்றன. எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல், குடும்பத்தில் உள்ள பெண்களே, பிளேடு, கத்தி போன்றவற்றை பயன்படுத்தி, இந்தச் சடங்கை செய்வதால், பெண்களுக்கு இரத்தப் போக்கு, தொற்று நோய் போன்றவை ஏற்படுகின்றன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.