2016-02-05 15:41:00

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் முயற்சியில் திருப்பீடம்


பிப்.05,2016. சிரியாவில் ஐந்தாண்டுகளாக இடம்பெற்றுவரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு அவசரகால மற்றும் நீண்ட கால உதவிகளுக்கு நிதி திரட்டும் முயற்சிகளுக்கு திருப்பீடம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கத்துடன், இலண்டனில் இவ்வியாழனன்று நடைபெற்ற பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர், பேராயர் பால் கெல்லகெர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

கத்தோலிக்கத் திருஅவை, தனது நிதி திரட்டும் முயற்சிகள் வழியாக, சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆற்றும் உதவிகளை, தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் உறுதி கூறினார் பேராயர் கெல்லகெர்.

பிரிட்டன், ஜெர்மனி, குவைத், நார்வே மற்றும் ஐ.நா. நிறுவனம் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

சிரியாவுக்குள் இடம்பெயர்ந்துள்ள ஒரு கோடியே 35 இலட்சம் பேருக்கும், அதன் அண்டை நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள 42 இலட்சம் பேருக்கும் உதவிகள் தேவைப்படுகின்றன என்று கூறப்படுகின்றது. மேலும், ஐ.நா. நிறுவனங்கள், இம்மக்களுக்கென, 840 கோடி டாலருக்கு விண்ணப்பித்துள்ளன.

இதற்கிடையே, இந்த இலண்டன் கூட்டத்தில் நாடுகள் ஆயிரம் கோடி டாலர் நிதி உதவிக்கு உறுதியளித்துள்ளன என்று ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.