2016-02-05 15:32:00

திருப்பீடத்தின் மூன்று துறைகளைப் பார்வையிட்டத் திருத்தந்தை


பிப்.05,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத் தலைமையகத்திலுள்ள மூன்று துறைகளுக்கு, இவ்வியாழனன்று முன்னறிவிப்பு ஏதுமின்றிச் சென்று, அங்குப் பணியாற்றும் அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.

கீழை வழிபாட்டுமுறை பேராயரம், திருப்பீட பிறரன்புப் பணிகள் அமைப்பான ‘கோர் ஊனும்’ அவை, நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் அவை ஆகிய மூன்று துறைகளையும் பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்துறைகளில் பணியாற்றுபவர்கள் கேட்க விரும்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் இசைவு தெரிவித்தார்.

திருத்தந்தையின் இந்நடவடிக்கை குறித்து, நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella அவர்கள், பின்னர் பேட்டியளித்தபோது, நற்செய்தியைப்பற்றி, குறிப்பாக, மேய்ப்புப் பணியில் மனமாற்றம் மற்றும் மறைக்கல்வியைப் பற்றி கேள்விகள் எழும்போது, அதனை எவ்வாறு புதிய வழியில் அறிவிப்பது என்பதற்கு, திருத்தந்தை, சிறந்த ஆலோசனைகளை வழங்கினார் என்று கூறினார்.

Padre Pio, Leopold Mandic ஆகிய இரு புனிதர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு பற்றியும் திருத்தந்தை குறிப்பிட்டார் என்றும் பேராயர் Fisichella அவர்கள் கூறினார்.

இவ்வள்ளி மாலை ஐந்து மணியிலிருந்து, வருகிற வியாழன் காலை 7.30 மணிவரை புனிதர்கள் Padre Pio, Leopold Mandic ஆகிய இரு புனிதர்களின் திருப்பண்டங்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் விசுவாசிகளின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.