2016-02-05 14:52:00

திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை Kirill சந்திப்பு


பிப்.05,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மாஸ்கோ மற்றும் அனைத்து இரஷ்யாவின் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களும், பிப்ரவரி 12, வருகிற வெள்ளிக்கிழமையன்று சந்தித்துப் பேசிய பின்னர், இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றில் கையெழுத்திடவுள்ளனர் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களும் கியூபாவில் சந்திக்கவிருப்பது குறித்து திருப்பீடமும், மாஸ்கோ முதுபெரும் தந்தையின் அலுவலகமும் இணைந்து, இவ்வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கை பற்றி அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

நீண்ட காலத் தயாரிப்புக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பு, வரலாற்றில் முதன் முறையாக இடம்பெறும் சந்திப்பு என்றும், கத்தோலிக்கத் திருஅவைக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையேயான உறவுகளில் முக்கியமான கட்டமாக இச்சந்திப்பு அமையும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

நல்மனம் கொண்ட அனைத்து மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக இச்சந்திப்பு அமையும் என்று திருப்பீடமும், மாஸ்கோ முதுபெரும் தந்தையின் அலுவலகமும் நம்புவதாகவும், இச்சந்திப்பு நல்ல பலன்களைத் தரும்படியாக அனைத்துக் கிறிஸ்தவர்களும் செபிக்க வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இறைவனின் திருவருளால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய முதுபெரும் தந்தை Kirill அவர்களும் சந்திக்கவுள்ளனர் என்று கூறும் அவ்வறிக்கை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோவுக்குச் செல்லும் வழியில், கியூபத் தலைநகர் ஹவானா ஹோசே மார்ட்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கி, முதுபெரும் தந்தை Kirill அவர்களைச் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அச்சமயத்தில் முதுபெரும் தந்தை Kirill அவர்கள், கியூபாவில் அதிகாரப்பூர்வப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விரு தலைவரும் அறிக்கையில் கையெழுத்திடும்போது, கியூப அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அவர்களும் உடனிருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.