2016-02-05 15:24:00

திருத்தந்தை: தாழ்மையின் வழியாக கடவுள் வெற்றி பெறுகிறார்


பிப்.05,2016. கடவுளின் வழி மனிதரின் வழி போன்றதல்ல, ஏனென்றால், கடவுள் தாழ்மையின் வழியாக வெற்றி பெறுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று தன் மறையுரையில் கூறினார்.

தான் தங்கியுள்ள சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு யோவான் அவர்களின் தலைவெட்டப்பட்ட நிகழ்வு பற்றிக் கூறும் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

இறைவாக்கினர்களில் மாபெரும் இறைவாக்கினராகிய திருமுழுக்கு யோவான் அவர்களின் மரணத்தில் கடவுளின் வழியைக் காண முடிகின்றது என்றும், மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்த நீதிமானும், புனிதரும், மனிதரில் மாபெரும் மனிதருமான இவர், ஒரு சிறையின் இருளில், தனிமையில் தலைவெட்டப்பட்டார் என்றும் கூறினார், திருத்தந்தை.

திருமுழுக்கு யோவான் அவர்கள், பெண்களில் பிறந்த மனிதரில் மிகப் பெரிய மனிதர், இவர் மாபெரும் புனிதர், ஆயினும் இவரது வாழ்வு சிறையில் முடிந்தது, சிறையில் உள்ளார்ந்த தனிமையில் இவர் அனுபவித்தத் துன்பம், உடலிலும், ஆன்மாவிலும், எல்லாவற்றிலும் நான் குறைய வேண்டும், குறைய வேண்டும் என்றே இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மாபெரும் மனிதர் தனது மகிமையைத் தேடவில்லை, ஆனால் கடவுளின் மகிமையைத் தேடினார், இயேசுவின் வருகைக்காகத் தயார் செய்த இவர், அதே வழியில், துன்பத்திலும், தனிமையிலும், சீடர்கள் இன்றியும் இறந்தார் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.