2016-02-04 16:26:00

‘Scholas Occurrentes’ அமைப்பினருடன் திருத்தந்தை


பிப்.04,2016. ‘Scholas Occurrentes’ என்ற பெயரில் இயங்கிவரும் பாப்பிறை அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களை, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து, எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசினார்.

கல்வி, கலை, விளையாட்டு இவற்றின் வழியாக இளைய தலைமுறையினரிடையே சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கத்தோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவெனோஸ் அயிரெஸ் பேராயராக பணியாற்றியபோது, உருவாக்கிய ‘Scholas Occurrentes’ என்ற அமைப்பு, தற்போது உலகின் பல நாடுகளில் பரவி, 4 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இவ்வமைப்பின் பிரதிநிதிகளை, இப்புதனன்று திருத்தந்தை சந்தித்த வேளையில், இந்த முயற்சியில் ஆர்வம் கொண்டுள்ள பிரேசில் நாட்டு புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் Ronaldinho அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

‘Scholas Occurrentes’ அமைப்பினர், தற்போது மேற்கொண்டுள்ள பல்வேறு செயல்திட்டங்கள் குறித்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டபின், திருத்தந்தை ஆற்றிய உரையில், ஒருங்கிணைப்பு என்ற கருத்தை வலியுறுத்தினார்.

மேமாதம் 29ம் தேதி, உரோம் நகரின் ஒலிம்பிக் திடலில் நடைபெறவிருக்கும் அமைதி விளையாட்டுப் போட்டிக்கு அனைவரும் வருமாறு திருத்தந்தை இக்கூட்டத்தில் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.