2016-02-04 16:33:00

முயற்சி இன்றி உயர்வடையமுடியும் என்பது சோதனை - திருத்தந்தை


பிப்.04,2016. உயர்ந்ததொரு முடிவை, எவ்வித முயற்சியும் இன்றி அடையமுடியும் என்று எண்ணுவது நமக்கு வரும்  சோதனை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் வழங்கிய மறைகல்வி உரையின் இறுதியில் கூறினார்.

'அமெரிக்கன் சர்க்கஸ்' என்ற குழுவினர் இப்புதனன்று திருத்தந்தையின் முன்னிலையில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியபோது, திருத்தந்தை அவர்களைப் பாராட்டும் வகையில் இவ்வாறு கூறினார்.

சர்க்கஸ் கலைஞர்கள் அழகை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர்கள் என்றும், அழகு நம்மை இறைவனுக்கு அருகில் அழைத்து வருகிறதென்பதால், கலைஞர்களின் திறமைகளுக்கு தான் நன்றி சொல்வதாகவும் திருத்தந்தை கூறினார்.

அவ்விதம் அழகை வெளிப்படுத்துவதற்கு, அக்கலைஞர்கள் மேற்கொள்ளும் கடினமான பயிற்சிகளே காரணம் என்றும், கடின உழைப்பின்றி உயர்வடைய எண்ணுவது, சோதனையே என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

மேலும், கிறிஸ்து பிறப்பு நிகழ்வைக் காட்டும் குடிலை வளாகத்தில் காண்பதற்கு இப்புதனே கடைசி நாள் என்பதைக் கூறியத் திருத்தந்தை, அந்தக் குடிலை அமைத்திருந்த குழுவினருக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

திருத்தந்தை வழங்கிய இந்த புதன் மறைகல்வி உரையில் தன் குடும்பத்தோடு கலந்துகொண்ட ஆங்கில திரைப்பட நடிகர் Joseph Fiennes அவர்கள், இறுதியில் திருத்தந்தையை தனிப்பட்ட வகையில் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்.

Shakespeare in Love என்ற திரைப்படத்தின் வழியே, பரிசும், புகழும் அடைந்த நடிகர் Joseph Fiennes அவர்கள், இயேசுவின் உயிர்ப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'Risen' என்ற திரைப்படத்தில் முக்கிய பாகமேற்று நடித்துள்ளார்.

இத்திரைப்படம் பிப்ரவரி 19ம் தேதி உலகின் பல நாடுகளில் வெளியாகிறது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.