2016-02-04 15:51:00

நாம் விட்டுச் செல்லக்கூடிய பாரம்பரியச் சொத்து, நம்பிக்கையே


பிப்.04,2016. நாம் பிறருக்கு விட்டுச் செல்லக்கூடிய மிக அழகிய பாரம்பரியச் சொத்து, நம்பிக்கையே என்ற எண்ணத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலையில் மறையுரை வழங்கினார்.

தான் தங்கியுள்ள சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், மன்னன் தாவீது மரணத்தைப் பற்றி கூறும் முதல் வாசகத்தை மையப்படுத்தி திருத்தந்தை வழங்கிய மறையுரையில், மரணத்தைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை ஏனெனில் நமக்கு வாழ்வு தொடர்கிறது என்று எடுத்துரைத்தார்.

புதன் மறைக்கல்வி உரை சந்திப்பு ஒன்றில் தான் சந்தித்த 83 வயது நிறைந்த ஓர் அருள் சகோதரியைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, அச்சகோதரி, தான் எதிர்பார்த்திருக்கும் அடுத்த வாழ்வைப் பற்றி அமைதியாகப் பேசியதும், அவர் முகத்தில் காணப்பட்ட ஒளியும் தன்னை பெரிதும் கவர்ந்தன என்று கூறினார்.

மரணத்தை நெருங்குபவர்கள், தங்கள் உயிலில், அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்வதைக் குறித்து பேசுகின்றனர் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தாவீது மன்னன் தன் வாரிசுகளுக்கு நம்பிக்கை என்ற தலைசிறந்த சொத்தை விட்டுச்சென்றார் என்று குறிப்பிட்டார்.

நாம் இவ்வுலகிற்கு என்ன விட்டுச்செல்லப் போகிறோம் என்ற கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்பவேண்டும் என்றும், தகுந்த விடையை இறைவன் நமக்குக் காட்டவேண்டும் என்றும் கூறி, திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

மேலும், "இறைவன் தன் மகன்கள், மகள்கள் நடுவில் வாழ விழைகிறார். அவருக்கு நம் இதயங்களில் இடம் அமைப்போம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.