2016-02-04 16:13:00

இரு புனிதர்களின் திருப்பண்டங்கள் உரோம் நகரை வந்தடைந்தன


பிப்.04,2016. 'பாத்ரே பியோ' என்று அன்புடன் அழைக்கப்படும் பியெத்ரெல்சீனா நகர் புனித பயஸ், புனித லியோபோல்தோ மாந்திக் ஆகிய இரு புனிதர்களின் திருப்பண்டங்கள், பிப்ரவரி 3, இப்புதனன்று உரோம் நகரை வந்தடைந்தன.

இரக்கத்தின் பணியாளர்கள் என்று அறியப்படும் இவ்விரு புனிதர்களும், தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை ஒப்புரவு அருள் அடையாளப் பணிக்கென அர்ப்பணித்தனர் என்பதால், இவ்விருவரின் புனித பண்டங்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி, உரோம் நகருக்குக் கொணரப்பட்டுள்ளன.

இப்புதனன்று உரோம் நகரை அடைந்துள்ள இத்திருப்பண்டங்கள், புனித இலாரன்ஸ் பசிலிக்காவிலும், புனித மீட்பர் ஆலயத்திலும் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டன.

பிப்ரவரி 5, இவ்வேள்ளியன்று மாலை 4 மணியளவில் புனித மீட்பர் ஆலயத்திலிருந்து, இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்களும் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்கு பவனியாகக் கொணரப்படுகின்றன.

பிப்ரவரி 6, சனிக்கிழமை காலை 10 மணிக்கு, புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் ஒரு சந்திப்பில், பாத்ரே பியோ அவர்களின் பெயரால் இயங்கிவரும் செபக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பிரான்சிஸ்கன் துறவுச்சபையைச் சேர்ந்த இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்கள், பிப்ரவரி 7,8,9 ஆகிய நாட்கள், புனித பேதுரு பசிலிக்காவில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்படும்.

பிப்ரவரி 10ம் தேதி, திருநீற்றுப் புதனன்று, மாலை 5 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்கள் முன்னிலையில் நிறைவேற்றும் திருப்பலியின்போது, இரக்கத்தின் மறைப்பணியாளர்களை உலகெங்கும் அனுப்பி வைப்பார்.

பிப்ரவரி 11ம் தேதி காலை 7.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவில், புதியவழி நற்செய்தி அறிவிப்புபணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ ­ஃபிசிக்கெல்லா அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியைத் தொடர்ந்து, இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்களும் உரோம் நகரிலிருந்து எடுத்துச் செல்லப்படும்.

ஆதாரம் : www.im.va / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.