2016-02-04 15:14:00

இது இரக்கத்தின் காலம் – ஆசை அகலாதவரை துன்பமும் விலகாது


ஒருசமயம் ஒருவர் குளத்தங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் தூண்டிலில் அகப்பட்ட மீன் கரையிலே கிடந்தது. அந்தச் சமயம் உயரே பறந்துகொண்டிருந்த ஒரு பருந்து, கரையிலே கிடந்த மீனைப் பார்த்தது. அவ்வளவுதான். அதைக் குறிபார்த்து அதற்கு நேரே பறந்து வந்து அந்த மீனைக் கொத்தி எடுத்துக் கொண்டு உயரே பறந்தது. அதைப் பார்த்த காகங்கள் கா..கா.. எனக் கத்தின. உடனடியாக, நூற்றுக்கணக்கான காகங்கள் பறந்து வந்து அந்தப் பருந்தை துரத்திச் சென்று, அதைச் சூழ்ந்துகொண்டன. ஒரே அமளி. பருந்தும் படாதபாடு பட்டது. அங்கேயும் இங்கேயும் பறந்து பார்த்தது. காகங்கள் பருந்தை விடுவதுபோல் தெரியவில்லை. நேரம் நேரம் ஆக ஆகத் தொல்லையும் அதிகரித்தது. பருந்து எந்தத் திசையில் பறந்தாலும் காகங்கள் கூட்டமும் பருந்துக்குப் பின்னாலே பறந்தது. பருந்து களைப்படைந்தது. அதன் அலகிலிருந்த மீனும் நழுவி கீழே விழுந்தது. அவ்வளவுதான். இப்போது அவ்வளவு காகங்களும், பருந்தைத் துரத்துவதை விட்டுவிட்டு, கா..கா.. எனக் கத்திக்கொண்டு தரையை நோக்கிப் பறக்கத் தொடங்கின. அப்பாடா... என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்தது பருந்து. பின்னர் சிந்தித்துப் பார்த்த பருந்துக்கு ஓர் உண்மை புரிந்தது. இவ்வளவு குழப்பத்திற்கும் இந்த மீன்தான் பிரச்சனை. இப்போது அந்த மீன் என்னிடம் இல்லை. நானும் நிம்மதியாக இருக்கிறேன் என்று பருந்து சொல்லிக்கொண்டது. (ஸ்ரீஇராமகிருஷ்ணர் சொன்னது)

மீன் என்ற ஆசை நம்மிடம் இருக்கும்வரை, துன்பம், கவலை, அமைதியின்மை போன்றவை நம்முடன் இருக்கும். ஆசைகள் அகலும்போது மனதில் நிம்மதி கிடைக்கிறது. அகவாழ்வைப் பரிசோதிக்க அழைக்கிறது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.