2016-02-03 16:58:00

இரயில் முன்பாக 'செல்ஃபி' எடுக்க முயன்ற பள்ளி மாணவன் பலி


பிப்.03,2016. சென்னை புறநகர் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த இரயில் முன்பாக "செல்ஃபி" புகைப்படம் எடுக்க முயன்ற தினேஷ்குமார் என்ற பள்ளி மாணவன், அதே இரயிலில் அடிப்பட்டு பலியானதாகக் கூறப்படும் சம்பவம், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

இந்த விபத்து குறித்து இரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாணவர் தினேஷ்குமாருடன் 5 நண்பர்கள் உடனிருந்ததாக இந்திய ஊடகம் ஒன்றிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை, தினேஷ்குமார் தன் நண்பர்களுடன் வண்டலூருக்கு உல்லாச சுற்றுலா சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர், இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தளங்களில் "செல்ஃபி" எடுக்க முயற்சித்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.

இதனைத்தடுக்க மும்பையில் உள்ள சுற்றுலா தளங்களின் சில பகுதிகளில் "செல்ஃபி" எடுத்துக்கொள்ள காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நடந்துள்ள இந்த உயிர்ப் பலிக்கான காரணம் "செல்ஃபி" மோகம் தான் என்றும் அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு நிலைகளில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து "செல்ஃபி" எடுக்கும்போது பலியாகும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. அதிகமாக "செல்ஃபி" எடுத்துக் கொள்பவர்களுக்கு ‘செல்ஃபிடிஸ்’ (Selfitis) என்ற நோய் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆதாரம் : TheHindu / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.