2016-02-03 16:01:00

அமைதி ஆர்வலர்கள்:2006ல் நொபெல் அமைதி விருது-கிராமின் வங்கி


பிப்.03,2016 சிறு கடன் திட்ட முன்னோடி என அழைக்கப்படும் பங்களாதேஷ் நாட்டு முகமது யூனுஸ்(Muhammad Yunus) அவர்களும், அவர் நிறுவிய கிராமின் வங்கியும்(Grameen Bank), 2006ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டனர். ஏழை மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைத்து  வரும் முகமது யூனுஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு வான்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரயியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் ஒரு பொருளாதார நிபுணர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் படிப்பை முடித்து அங்கேயே பணியாற்றி வந்த இவர், 1971ம் ஆண்டு டிசம்பரில், பங்களாதேஷ் நாட்டின் விடுதலைப் போர் முடிவடைந்து, அந்நாடு, தனிநாடாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட 1972ம் ஆண்டில்  பங்களாதேஷ் திரும்பினார். மேற்கத்திய நாடுகளின் சிந்தனைப் போக்குடனும், பல பல இலட்சியக் கனவுகளோடும் இவர் தாயகம் திரும்பினார். போருக்குப் பின்னர் நாட்டில் எல்லாத் துறைகளிலும் இன்னல்களே என்றாலும், பங்களாதேஷ் மக்கள் நெஞ்சுரத்துடன் அவற்றை எதிர்கொள்வதைப் பார்த்தார் இவர். அரசின் திட்டக் குழுவில், முக்கிய ஒரு பதவியில் வேலை கிடைத்தாலும், அதில் நிறைவின்றி, அவ்வேலையைத் துறந்துவிட்டு, சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் தலைவராகச் சேர்ந்தார் முகமது யூனுஸ்.

பங்களாதேஷ் நாட்டில் 1974ம் ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தனது சொந்தக் கிராமமான Jobraவில் மூங்கில் இருக்கைகள் செய்யும் ஒரு பெண், உள்ளூர் வட்டிக்காரரிடம் கடன் பெற்று மூங்கில் வாங்கி, இருக்கைகள் தயாரித்து, அவற்றை விற்ற பணத்தில் பெரும்பாலானதை கடன் கொடுத்தவருக்குத் திருப்பித் தரவேண்டிய அவல நிலையை அறிந்தார். அந்தப் பெண் போலவே மொத்தம் 42 மூங்கில் கூடை முடைபவர்கள் அதே பிரச்சனைக்கு உட்பட்டிருப்பதை அறிந்து, அவர்கள் அனைவரும் செலுத்தவேண்டிய தொகையை அவர்கள் சார்பில் யூனுஸ் அவர்கள் செலுத்தினார். பிறகு அவர்கள் அனைவரும் அவருக்கு அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டனர். எனவே யூனுஸ் அவர்கள், 42 ஏழைக் குடும்பங்களுக்கு, 27 அமெரிக்க டாலர் பண மதிப்பிலான தொகையை சிறு கடனாக வழங்கி, சிறுதொழில் தொடங்க உதவினார். இவ்வாறு சிறு கடன் தொகையை பெருமளவான மக்களுக்கு வழங்குவதன் வழியாக, தொழில்களை ஊக்கப்படுத்த முடியும் மற்றும் நாட்டில் கிராமப்புற வறுமையை அகற்ற முடியும் என்பதையும் உணர்ந்தார் இவர். இது குறித்த தனது கொள்கைகளை ஒரு பரிசோதனை முறையாக, சிட்டகாங் பல்கலைக்கழகத்தில், கிராமப் பொருளாதாரத் திட்டம் என்ற பெயரில், வங்கி வழியாக, ஏழைகளுக்கு சிறு கடன் வழங்கினார். இத்திட்டம் குறித்த ஆய்வை தனது மாணவர்களைக் கொண்டு நடத்தினார். இந்த ஆய்வு மற்றும் அவரின் தனிப்பட்ட அனுபவத்தின் பயனாக, பெங்காள மொழியில் கிராமங்களின் வங்கி எனப்படும் கிராமின் வங்கி குறித்த கொள்கைகளை உருவாக்கினார். பங்களாதேஷ் வங்கியின் ஆதரவுடன் கிராமின் வங்கித் திட்டம் வெற்றி பெற்றது.

இவ்வங்கித் திட்டம், 1979ம் ஆண்டில், டாக்கா நகருக்கு வடக்கேயுள்ள Tangail மாவட்டத்தில் பரவி, பின்னர் நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவியது. 1983ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பங்களாதேஷ் அரசு இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அதன் பின்னர் தனிப்பட்ட வங்கியாகச் செயல்படத் தொடங்கியது கிராமின் வங்கி. அமெரிக்க ஃபோர்டு அறக்கட்டளையும் இதற்கு உதவியது. 1998ம் ஆண்டில் பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அப்போது கிராமின் வங்கியில் கடன் பெற்றவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் இருந்தனர். இதனால் இவ்வங்கி சிறிது பின்னடவை எதிர்கொண்டாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயிர்பெற்றது. 2006ம் ஆண்டின் மத்திய பகுதி வரையில் மட்டும், இவ்வங்கி 2,100க்கு மேலான கிளைகளை பங்களாதேஷ் நாடு முழுவதும் கொண்டிருந்தது.

கிராமின் வங்கி, சிறிய அளவில் கடன் வழங்குவதன் வழியாக, ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த வங்கி வகுத்துள்ள புதிய இலக்கில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாழ்வின் அனைத்து நிலைகளிலும், ஒழுங்குமுறை, ஒற்றுமை, துணிவு, கடின உழைப்பு ஆகியவற்றை ஊக்குவித்தல், குடும்பங்களுக்கு வளமையைக் கொணர்தல், சேதமடைந்த வீடுகளில் மக்களை வாழ விடாமல் அவைகளை உடனடியாகப் பழுது பார்த்தல் மற்றும் விரைவில் புதிய வீடுகளைக் கட்டுதல், ஆண்டு முழுவதும் காய்கறிகளைப் பயிரிடுதல், காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட்டு, மீதமிருப்பதை விற்றல், பயிரிடும் காலத்தில் அதிகமான கன்றுகளை நடுதல், சிறிய குடும்பங்களை அமைத்து, செலவினங்களைக் குறைத்து, நலவாழ்வைப் பாதுகாத்தல், சிறார்க்கு கல்வி வழங்கி அவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு உழைத்தல், குழந்தைகளையும், சுற்றுச்சூழலையும் எப்போதும் பாதுகாத்தல், கழிப்பறைகளைக் கட்டிப் பயன்படுத்தல், தண்ணீரைச் சுடவைத்துக் குடித்தல், மகன்களின் திருமணங்களின்போது வரதட்சணை வாங்காமல் இருத்தல், மகள்களின் திருமணத்தில் வரதட்சணை கொடுக்காமல் இருத்தல், குழந்தைத் திருமணத்தைத் தவிர்த்தல், யாருக்கும் அநீதி இழைக்காதிருத்தல், ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்குத் தயாராக இருத்தல், யாராவது கஷ்டப்பட்டால் அவர்களுக்கு உதவுதல், மையங்களில் ஒழுங்கு முறைகேடு நடந்தால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்தல், அனைத்து சமூக நடவடிக்கைகளிலும் பங்கெடுத்தல் போன்ற தீர்மானங்களை கிராமின் வங்கி எடுத்துள்ளது.    

கிராமின் வங்கி, சிறு கடன் வங்கிகளின் முன்னோடியாகும். கிராமின் வங்கி மூலம் கடன் பெறுபவர்களில் 97 விழுக்காட்டினர் பெண்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்களில் 97 விழுக்காட்டுத் தொகை முறைப்படி திருப்பியும் செலுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பங்களாதேஷ் நாட்டில் ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள், கிராமின் வங்கியில் உறுப்பினராகிக் கடன் வாங்கியிருக்கின்றனர். இவ்வங்கி 2005ம் ஆண்டின் தொடக்கத்தில், 470 கோடி டாலரையும், 2008ம் ஆண்டின் இறுதியில் 760 கோடி டாலரையும் ஏழைகளுக்குக் கடனாக வழங்கியுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்துவதை உறுதிப்படுத்த "தோழமை குழுக்கள்" எனும் முறையை இவ்வங்கி கையாளுகின்றது. உலக அளவில் வங்கித் துறையில் சாதனை படைத்துள்ளதோடு, படிக்காத கிராமப்புறப் பெண்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களைத் தொழில் தொடங்க வைத்து சொந்தக் காலில் நிற்கச் செய்வதில் இதன் பங்களிப்பு மகத்தானது. கிராமின் வங்கி மூலம், கல்விக் கடன், வீட்டுக் கடன், மீன்பிடி, விவசாயம், கைத்தறி, கட்டுமானம் போன்ற தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. முகமது யூனுஸ் அவர்களின் இந்தச் சிறு கடன் திட்டம், உலக அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், வறுமை ஒழிப்புக்கு சிறந்த வழியை உருவாக்கியவர் என்று உலகப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டுகின்றனர். வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளில், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்து சமூக, பொருளாதாரத்தில் அவர்களது நிலை உயர முகமது யூனுஸ் அவர்கள் தொடர்ந்து உழைத்து வருகிறார். யூனுஸ் அவர்கள், 'Banker to the Poor' எனும் நூலின் ஆசிரியருமாவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.