2016-02-02 15:55:00

சீனாவின் வளரும் வல்லமை குறித்து உலகம் அஞ்சத் தேவையில்லை


பிப்.02,2016. சீனா ஒரு பெரிய நாடு, சீனாவின் வளரும் வல்லமை குறித்து உலகம் அஞ்சத் தேவையில்லை, ஆனால் உண்மையான அமைதி, உரையாடல் வழியாகவே கிட்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஹாங்காங்கை மையமாகக் கொண்டு இயங்கும் Asia Times இணையதள இதழுக்குத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதுபவரும், சீன Renmin பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளருமான Francesco Sisci அவர்களுக்கு, சனவரி 28, கடந்த வியாழனன்று, சீனா பற்றி, வத்திக்கானில் நீண்ட பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவின் புதிய ஆண்டை முன்னிட்டு, சீன மக்களுக்கும், சீன அரசுத்தலைவர் Xi Jinping அவர்களுக்கும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

தனது இளம் வயதிலிருந்தே சீனா பற்றி வியந்து வருவதாகவும், சீனா எப்போதுமே மேன்மை நிறைந்தது எனவும் கூறிய திருத்தந்தை, என்றுமே குறையாத ஞானத்தோடு விளங்கும் அந்நாட்டின் மாபெரும் கலாச்சாரம், தன்னை எப்போதும் கவர்ந்து வந்துள்ளது என்றும் கூறினார்.

சீனாவின் வளர்ச்சி முன்வைக்கும் சவால்கள் பற்றிக் கேட்டபோது, சீனாவின் வளரும் வல்லமை குறித்து உலகம் அஞ்சத் தேவையில்லை என்றும், மக்கள் முன்னோக்கிச் செல்கின்றனர் என்றால், அவர்கள் வரலாறு படைக்கின்றனர் என்று பொருள், எனவே  அது தன்னை கவலைப்பட வைப்பதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

உலகின் மேற்கு, கிழக்கு, சீனா ஆகிய அனைத்தும், அமைதியைக் காத்து உறுதிப்படுத்துவதற்குத் திறனைக் கொண்டுள்ளன, ஆயினும், உரையாடல் வழியாகவே அமைதி கிட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை. சீனா அண்மையில் ஒரு குழந்தை திட்டத்தை அகற்றிவிட்டது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, குழந்தைகளைக் கொண்டிராமல் இருப்பது வேதனை தருவது, ஏனெனில் ஒரு குழந்தை, தனது பெற்றோர், தாத்தா பாட்டிகளின் சுமையைத் தாங்க வேண்டும், அது அப்படியே தொடரும் என்றும் கூறினார். சீனப் புத்தாண்டு சிறப்பிக்கப்படவுள்ள இவ்வேளையில், சீன அரசுத்தலைவர் Xi Jinping அவர்களுக்கும், அனைத்து சீன மக்களுக்கும், நல்வாழ்த்துக்களைத்  தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் பேட்டியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் ஒரு சீன அரசுத்தலைவருக்கு, ஒரு திருத்தந்தை அவர்கள், லூனார் புதிய ஆண்டுக்கு வாழ்த்துக் கூறியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. சீனப் புத்தாண்டு, பிப்ரவரி 8, வருகிற திங்களன்று  சிறப்பிக்கப்படுகின்றது. இந்தப் புதிய ஆண்டு, குரங்கு ஆண்டாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.