2016-02-01 16:09:00

ஹங்கேரி நாட்டில் 52வது அகில உலக திருநற்கருணை மாநாடு


பிப்.01,2016. 52வது அகில உலக திருநற்கருணை மாநாடு, 2020ம் ஆண்டில் ஹங்கேரி நாட்டுத் தலைநகர் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்று வந்த 51வது அகில உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவு திருப்பலியில் கலந்து கொண்ட இலட்சக்கணக்கான விசுவாசிகளுக்கு, காணொளிச் செய்தி வழியாக, உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 52வது அகில உலக திருநற்கருணை மாநாடு புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் என்பதை மகிழ்வோடு அறிவிப்பதாகக் கூறினார்.

மேலும், இத்திருநற்கருணை மாநாடு, பரந்த ஆசியக் கண்டத்திலிருந்தும், உலகின் பிற பாகங்களிலிருந்தும் பலரை ஒன்று சேர்த்துள்ளது என்பதில் மகிழ்வடைகின்றேன் என்று அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை, பிற மதங்களுடன் மதிப்புமிகுந்த உரையாடலுக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள ஆசியாவில், வாழ்வின் உரையாடல் வழியாக, இயேசுவுக்குச் சாட்சி பகரப்படுகின்றது, இறையன்பால் மாற்றப்பட்ட வாழ்க்கைச் சான்றுகள் வழியாக, இறையாட்சியின் வாக்குறுதியாகிய, ஒப்புரவு, நீதி, மற்றும் மனிதக் குடும்பத்தின் ஒற்றுமையை நாம் சிறப்பாக அறிவிக்கிறோம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

பிலிப்பைன்ஸ் நாட்டிற்குத் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், யோலாந்தா கடும் புயலுக்குப் பின்னர் இடம்பெற்றது என்றும், தனது திருத்தூதுப் பயணத்தில், பிலிப்பைன்ஸ் மக்களின் ஆழமான விசுவாசத்திற்கும், அவர்கள் அப்பேரிடரை எதிர்கொண்ட முறைக்கும் சான்று பகர்ந்ததை நேரிடையாகக் காண முடிந்தது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு, பணிவான பணியின் அடையாளமாக, தம் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவினார், திருநற்கருணையும், பணிவான சேவையின் கல்விக்கூடம், நாம் பிறருக்குத் தொண்டுபுரிவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை இது கற்பிக்கின்றது, இதுவே, திருத்தூது மறைப்பணியின் மையம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் அகில உலக திருநற்கருணை மாநாடு நடத்தப்படுகின்றது. ஹங்கேரி நாட்டில், 1938ம் ஆண்டில், 34வது  அகில உலக திரு நற்கருணை மாநாடு முதலில் நடைபெற்றது. மீண்டும், 82 ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாவது முறையாக, அந்நாட்டில் இம்மாநாடு 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.