2016-02-01 16:06:00

வாரம் ஓர் அலசல் – உலக பல்சமய நல்லிணக்க வாரம் 2016


பிப்.01,2016. ராஞ்சி அருகே உள்ள ஹபுவா கிராமம், முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு சிறிய கிராமம். ஜார்கண்ட் மாநிலத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் வங்கிக் கொள்ளை, இன்னும், சங்கிலிப் பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடந்தாலும், காவல்துறை உடனடியாக வருவது இந்தக் கிராமத்துக்குத்தான். அந்த அளவுக்கு இங்கிருந்த மக்கள் திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆயிரம் பேர் மட்டுமே வாழும் இங்கு, பெரியவர்கள் வயலில் இறங்கி பணியாற்றுவதைப் பார்க்கவே முடியாது. குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் இந்த அளவுக்கு மோசமாக இருந்த இக்கிராமத்தை அப்படியே தலைகீழாக மாற்றி, இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சித்திநாத் சிங். பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவராக 15 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற சித்திநாத் சிங், மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கிராமத்துக்கு வந்தார். அப்போது, இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கவலையை பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். இக்கிராமத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்து வந்தாலும், மதத்தைப் பார்க்காமல், மக்கள் மனதைப் பார்த்து, அவர்களை முன்னேற்றுவதற்கான களப்பணியில் இறங்கினார் சித்திநாத். ஆரம்பத்தில் கல்பதரு என்ற பெயரில் பொறியியல் நிறுவனத்தைத் தொடங்கி இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, தங்களது எதிர்கால வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டனர். அதன் விளைவால் இன்று நிறைய இளைஞர்கள் அதானி குழுமம் மற்றும் ஹிண்டால்கோ போன்ற பெரிய நிறுவனத்தில் கவுரவமான முறையில் பணியாற்றி வருகின்றனர். ஒரு சிலர் அரபு நாடுகளுக்கும் சென்று கை நிறையச் சம்பாதித்து தங்களது குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக ஹபுவா கிராமத்தில் சித்திநாத் சிங் அவர்கள் ஆற்றி வரும் ஒப்பற்ற பணி குறித்து ஜூபேர் அஹமது என்பவர் கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் கிராம மக்கள் மீது எந்தவொரு குற்றவழக்கும் இல்லை. தற்போது நாங்கள் கண்ணியமாக வாழ கற்றுக் கொண்டோம்’என்றார். மேலும், ஜனிஸார் அன்சார் என்ற 10-ம் வகுப்பு மாணவர் கூறும்போது, சித்திநாத் சிங் அவர்கள், எங்களுக்கு கடவுள் போன்றவர். எனது ஒட்டுமொத்த படிப்புச் செலவையும் அவர் ஏற்றுக் கொண்டார். ஐஐடியில் படித்து, ஹபுவா கிராமத்தில் முதல் பொறியாளராக உருவாக வேண்டும் என்பது தான் எனது ஆசை’என்றார்.

இந்தியாவில் சகிப்பற்றதன்மை வளர்ந்துவரும் நிலை காணப்பட்டாலும், ஆரவாரமில்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக முஸ்லிம் கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் வழிகாட்டி வந்திருப்பது, நாட்டில் பரவலாக மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தி இந்து தினத்தாளில் இந்தச் சனவரியில்(9,2016) செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பரில், உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி கிராமத்தில் முகமது இக்லாக் குடும்பத்தினர் (செப்.28,2015) மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தி பரவியதையடுத்து 200 பேர் கொண்ட கும்பல், இக்லாக் குடும்பத்தினர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியது. அதில் இக்லாக் கொல்லப்பட்டார். அச்சமயத்தில் பிசோதா கிராமத்தைச் சேர்ந்த ஹக்கீம், தனது 2 மகள்களுக்கு இதே கிராமத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். அப்போது அங்கு நிலவிய பதட்டத்தால், அவர் கலங்கினார். ஆனால், அந்த இரு முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை இந்துக்கள் செய்து கொடுத்தனர் என்று அப்போது ஒரு செய்தி இணைய இதழில் வெளியாகிருந்த்து. இது இதுகுறித்து ஹக்கீம் கூறும் போது, “எங்கள் கிராமம் பெரிய குடும்பம் போன்றது. எங்களுக்குள் பிரச்சனை ஏற்படும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது வழக்கம். இந்துக்கள் எனக்குப் பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உதவி செய்து வருகின்றனர். அதுபோல் எனது மகள்களின் திருமணத்தையும் தங்கள் சொந்த மகள்களின் திருமணமாகக் கருதி நடத்தி வைத்தார்கள்” என்றார்.

மேலும், அண்மை சென்னை வெள்ளப் பெருக்கின்போது, இசுலாமிய சகோதரர்கள், சென்னையில் நான்கு முக்கிய தர்காக்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திறந்து விட்டுவிட்டு, அவைகளுக்கு வெளியே தங்களின் தொழுகையை நடத்தியது மற்றும் இசுலாமிய சகோதரர்கள் ஆற்றிய மற்ற மனிதாபிமான உதவிகள் பற்றி நமக்குத் தெரியும். பங்களாதேஷ் நாட்டில், Shibu Gomes என்ற 55 வயது கத்தோலிக்க ஏழை விவசாயி, கடந்த நாற்பது ஆண்டுகளாக சமயப் பாகுபாடின்றி, ஏழைகளை அடக்கம் செய்வதற்குப் புதைகுழிகளை இலவசமாக வெட்டி உதவி வருகிறார். இளமையிலிருந்தே இவ்வுதவியை ஆற்றி வரும் இவர் சொல்கிறார் – ஒரு குழியை வெட்டுவதற்கு ஏறக்குறைய ஒரு மெட்ரிக் டன் மண்ணை வெளியே எடுக்க வேண்டும். இது கடினமாக இருக்கும். வெட்டும்போது மண் என்மேல் சரிந்து விழாமல் இருப்பதற்கு இன்னொருவர் உதவினால் நன்றாக இருக்கும், ஆனாலும், நானும் ஒருநாள் இறப்பேன், எனது பணிக்கு ஆண்டவர் ஒருநாள் பலனளிப்பார் என்று நம்புகிறேன் என்று.

அன்பு நேயர்களே, இப்படி தன்னார்வலர்கள், எல்லா மதங்களிலுமே, ஆரவாரமின்றி, பிற மதத்தவருக்கு உதவி வருகின்றனர். பிற மதத்தவரோடு சண்டை சச்சரவு இன்றி, நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். வானொலி நேயர்களே, நீங்களும்கூட இந்தத் தன்னார்வலர்களில் ஒருவராகவும், பிற மதத்தவரோடு இணக்கமாக வாழ்பவராகவும் இருக்கலாம். தொடருங்கள் உங்கள் நற்பணியை.

ஐக்கிய நாடுகள் நிறுவனம், 2011ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்தை உலக பல்சமய நல்லிணக்க வாரமாகக் கடைப்பிடித்து வருகிறது. 2010ம் ஆண்டில் இந்த உலக பல்சமய நல்லிணக்க வாரத்திற்கு இசைவு தெரிவித்த ஐ.நா.பொது அவை அதற்குக் காரணத்தையும் விளக்கியது. உலக பல்சமய நல்லிணக்க வாரம், அனைத்து மதங்களின் மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. உலகின் பெரிய மதங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள, சகிப்புத்தன்மை மற்றும் ஒருவர் ஒருவரை மதித்தலின் கோட்பாடுகளை இந்த உலக வாரம் சிறப்பிக்கின்றது. இத்திங்களன்று தொடங்கியுள்ள இந்த வாரம் குறித்துப் பேசியுள்ள ஐ.நா. நிறுவனம், சமயத் தீவிரவாத நடவடிக்கைகளால் இக்காலம் துன்புற்றுவரும் வேளையில், அமைதி மற்றும் வளமையின் உரையாடலை ஊக்குவிக்குமாறும், பல்சமய நல்லிணக்கத்தையும், அதற்கான நன்மனத்தையும் கொண்ட செய்திகளை, உலகின் அனைத்து ஆலயங்கள், மசூதிகள், தொழுகைக்கூடங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் பரப்புமாறும், நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. “இறையன்பும் பிறன்பும் அல்லது நன்மை மற்றும் அடுத்திருப்பவர் மீது அன்பு செலுத்து” என்ற தலைப்பில் இந்த உலக வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. 

ஒருநாள் கடவுள் ஒருவருக்குக் கனவில் தோன்றி, உன்னைவிட்டுப் போகாலம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன், அதனாலே, உனக்கு வேணும்கிறதைக் கேட்டு வாங்கிக்க, நான் போனப்புறம் சிரமப்படாதே, ஒரு நாள் அவகாசம் தாரேன், யோசிச்சுக் கேள் என்றார். அடுத்த நாள் காலையில தனது கனவை வீட்டாரிடம் சொல்லி ஆலோசனை கேட்டார் அவர். நமக்கு இப்போ எவ்வளவு சொத்து இருக்கோ அதேபோல் இன்னொரு மடங்கு கேளுங்க, வேறு எதுவும் வேண்டாம் என்றார் அவரின் மனைவி. அதுக்குள்ள அவரது மகன் வந்து, அப்பா, நாம உடுத்துறதுக்க உடையும், உண்ண உணவும் தட்டுப்பாடில்லாம கிடைக்கணும்னு கேளுங்க என்றான். மகளோ, அப்பா, நம்ம வீட்டுல வறுமை வேண்டாம்னு சுருக்கமா கேளுங்க என்றாள். அதற்குள் அவ்வீட்டுப் பணிப்பெண் வந்து, ஐயா, நம்ம வீட்டுல எல்லாரும் அன்பா, பாசமா, சண்டை போடாம அமைதியா வாழணும்னு கேளுங்க என்றார். மறுநாள் கடவுள் கனவில் வந்தார். அப்போது அவர், கடவுளே, எங்க குடும்பத்துல நாங்க எல்லாரும் அன்பா, பாசமா, சண்டை போடாமா வாழணும், இந்த வரத்தைக் கொடுங்கள் என்று சொன்னார். அப்போது கடவுள், எந்த இடத்துல அன்பும், பாசமும் இருக்கோ, எங்கே சண்டையில்லாம அமைதி நிலவுதோ  அங்கேதான் நான் இருக்க விரும்புவேன். நீ இப்படி வரம் கேட்டதால நான் உன்னைவிட்டுப் போக முடியாதபடி பண்ணிட்ட, நான் இங்கேதான் இருக்கப் போறேன் என்று சொல்லி கடவுள் மறைந்தார். அன்பு நேயர்களே, இக்காலத்தில், ஆண்டவன் பெயரைச் சொல்லி அமைதி குலைக்கப்படுகின்றது. கடவுள் பெயரில்தான் எத்தனை பயங்கரவாதச் செயல்கள். கடவுளையும்,  அவரின் பண்புகளையும் உண்மையாக அறிபவர்கள், இத்தகைய அறிவற்ற, மனிதமற்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். இவர்கள் உண்மையான கடவுளை வணங்குபவர்கள் அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.

அரபு நாடுகளில் நடக்கும் சண்டைகளால் கடந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 26 ஆயிரம் சிறார் யாருடைய துணையுமின்றி ஐரோப்பாவுக்குள் வந்துள்ளனர். ஐரோப்பாவுக்குள் பதிவு செய்திருந்த புலம் பெயர்ந்த சிறாரில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர், கடந்த இரு ஆண்டுகளில் காணாமல் போயுள்ளனர். குற்றக் கும்பல்களால், சிறாரும், இளையோரும் பாலியல் மற்றும் அடிமைத் தொழிலில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின்(EU) இரகசிய காவல்துறை இஞ்ஞாயிறன்று கூறியுள்ளது. மேலும், சிரியாவின் தெற்கு டமாஸ்கஸ் பகுதியில், சைதா ஷெய்னப் எனப்படும் ஷியா வழிபாட்டு தலத்திற்கு அருகே இஞ்ஞாயிறன்று இரட்டைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 45 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்த கட்டடங்களும் கார்களும் எரிந்து கருகிப்போனதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அன்பர்களே, மதத் தீவிரவாதமே இந்நிலைக்கு காரணம். மனிதர் மனங்களிலே அன்பும் பாசமும் இருந்தாலே, மதத்தவர் மத்தியில் புரிந்துகொள்தலும், சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் வளரும். நாம் எதை அன்புகூர்கிறோமோ அதுவே நம்மை வடிவமைக்கும். சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.