2016-02-01 16:27:00

இறை இதயத்திலிருந்து எந்தச் சூழலும் பிரித்துவிடாதிருக்கட்டும்


பிப்.01,2016. கடவுளின் பார்வையில் ஒரே சலுகை என்பது, ஒருவர், எவ்விதச் சலுகைகளும் பெறாமலும், மனிதர் மீது முழு நம்பிக்கை வைக்காமல், ஆண்டவரின் கரங்களில் தன்னை முழுமையாய்க் கையளிப்பதுமாகும் என்று இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

லூக்கா நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வாசகம், பொறாமையால் நம் பகுதிகளில் சில நேரங்களில் நடப்பது போன்று, அடுத்திருக்கும் இருவருக்கு இடையில் இடம்பெறும் சச்சரவு பற்றியது மட்டுமல்ல என்றுரைத்த திருத்தந்தை, மதத்தை மனித முதலீடாக நோக்கி, நம் சொந்த ஆதாயங்களுக்காக, கடவுளிடம் பேரம் பேசத் தொடங்கும் சோதனைக்கு நாம் உட்படாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு படைப்பையும், மனிதர் கண்களுக்கு முக்கியமற்றதாகத் தெரியும் மிகச் சிறியவற்றையும்கூட பராமரிக்கும் இறைத்தந்தையின் வெளிப்பாட்டை வரவேற்பதாக இந்நற்செய்திப் பகுதி உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் இறைவாக்குப் பணி இதில் அடங்கியுள்ளது என்றும், கடவுளின் பார்வையில் ஒரே சலுகை என்பது, ஒருவர், எவ்விதச் சலுகைகளும் பெறாமலும், ஆண்டவரின் கரங்களில் தன்னை முழுமையாய்க் கையளிப்பதுமாகும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்வத்தால் நாம் வீழ்ந்துள்ள படுகுழியிலிருந்து நம்மைத் தூக்கிவிடுவதற்கு கடவுள் தம் கரங்களை நீட்டுகின்றார் என்றும் கூறிய திருத்தந்தை, நற்செய்தியின் ஆறுதலளிக்கும் உண்மையை வரவேற்று, சரியான பாதைகளில் நாம் நடக்குமாறு அழைப்பு விடுத்தார்.

கடவுளின் இதயத்திலிருந்து நம்மை எந்த மனிதச் சூழலும் பிரித்துவிடாதிருப்பதில் நாம் கவனமாய் இருப்போம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.