2016-02-01 15:38:00

Zika நோய்க் கிருமி குறித்து WHO அவசரக் கூட்டம்


பிப்.01,2016. இருபதுக்கு மேற்பட்ட அமெரிக்க நாடுகளில் Zika நோய்க் கிருமி வேகமாகப் பரவிவரும்வேளை, இதனை, ஓர் உலகளாவிய நலவாழ்வுப் பிரச்சனையாக அறிவிப்பது பற்றி விவாதிப்பதற்காக இத்திங்களன்று அவசர கூட்டம் ஒன்றை கூட்டியது WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம்.

பிரேசில் நாட்டில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மோசமான பிறவிக் கோளாறுகளுடன் பிள்ளைகள் பிறப்பதை, Zika நோய்க் கிருமி பரவலோடு தொடர்புபடுத்தப்படும் நிலையில், இக்கிருமி, தற்போது 25 நாடுகளில் பரவியுள்ளதாகவும், இவ்வாண்டில் அமெரிக்க நாடுகளில் முப்பது இலட்சம் முதல் நாற்பது இலட்சம் பேர் வரை இந்நோய்க் கிருமியால் தாக்கப்படலாம் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்நோய்க் கிருமி பரவுவதை, உலகளாவிய நலவாழ்வு நெருக்கடியாக அறிக்கையிட்டால், அது பணம், வளங்கள், அறிவியல் நுட்பம் போன்றவற்றை ஒன்று திரட்டவும், புதிய ஆய்வுகளைத் தொடங்கி, தடுப்பு மருந்து ஒன்றை வேகமாகக் கண்டுபிடிக்கவும் உதவும் எனவும் WHO நிறுவனம் கூறுகிறது.

மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா பரவியபோது அதனை ஒரு நலவாழ்வு நெருக்கடியாக அறிவிக்க தாமதம் ஏற்பட்டதையும் WHO நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.