2016-01-30 14:43:00

மனிதவாழ்வை எப்போதும் பாதுகாக்குமாறு திருத்தந்தை விண்ணப்பம்


சன.30,2016. இன்றைய சமூக வாழ்வின் தரம், வாகனங்களின் தரத்தை அதிகம் சார்ந்துள்ளது என்பதால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகைகளைக் குறைப்பதற்கு எப்போதும் அதிகமாக உழைக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்

இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற யூபிலி பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட உரோம் பொதுப் போக்குவரத்து கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

மேலும், பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட இத்தாலிய தேசிய மாற்றுத்திறனாளித் தொழிலாளர் கழக உறுப்பினர்களிடம், உங்களின் இருப்பு, தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துச் சொல்கிறது என்று கூறிய திருத்தந்தை, இறைவனின் கொடையாகிய மனித வாழ்வு எப்போதும் பாதுகாக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

சனவரி 31, இஞ்ஞாயிறன்று, இளையோரின் திருத்தூதராகிய புனித தொன்போஸ்கோ விழா சிறப்பிக்கப்படுவதை நினைவுபடுத்தி, இளையோர் இப்புனிதரின் பாதையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் பணிசெய்த எல்வீரா என்ற பெண், நோயினால் சிலகாலம் துன்புற்று இவ்வெள்ளியன்று இறந்ததைக் குறிப்பிட்டு, அவரின் ஆன்மா நிறைசாந்தியடையவும், அவரின் கணவர் மற்றும் குழந்தைகளுக்காகச் செபிக்கவும் திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா, ஒரு பெரிய இல்லம், இங்கு ஏறக்குறைய நாற்பது அருள்பணியாளர்களும், திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றும் சில ஆயர்களும் வாழ்கின்றனர். உரோம் நகருக்கு கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் பொதுநிலையினரும் இங்கு விருந்தாளிகளாகத் தங்குகின்றனர். இந்த இல்லத்தைச் சுத்தம் செய்யும், சமையல் மற்றும் சாப்பாட்டு அறையில் பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் எல்வீராவும் ஒருவர். இப்பணியாளர்கள் வெறும் வேலையாட்கள் அல்ல, இவர்கள், இந்த இல்லக் குடும்பத்தில் ஓர் அங்கம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.