2016-01-30 15:18:00

அர்ப்பண வாழ்வு மகிழ்வாய் இருப்பதற்கு அழைக்கின்றது


சன.30,2016. அர்ப்பண வாழ்வு வாழ்வோர்க்கு, மகிழ்வாக இருப்பது ஒரு வாய்ப்பு அல்ல, ஆனால், இது அவர்களின் கடமையாகும் என்று, திருப்பீட அர்ப்பண வாழ்வுப் பேராயச் செயலர் பேராயர் José Rodríguez Carballo அவர்கள் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் அர்ப்பண வாழ்வு ஆண்டின் நிறைவு நிகழ்ச்சிகள், உரோம் நகரில் நடைபெற்றுவரும் வேளை, இந்நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பேராயர் Carballo அவர்கள், இவ்வாறு கூறினார்.

இறைவன் நம் இதயங்களை நிறைப்பார் மற்றும் நம்மை மகிழ்வாய் வைத்திருப்பார் என்பதையும், சகோதர, சகோதரிகள் இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள் என்பதையும் நாம் நம்பினால், கிறிஸ்துவில் நமது மகிழ்வென்னும் கொடையை இவ்வுலகோடு பகிர்ந்து கொள்ளாமல் நம்மால் இருக்க இயலாது என்றும் கூறினார் பேராயர் Carballo.

சனவரி 28, இவ்வியாழன் முதல் நடைபெற்றுவரும் நிறைவு நிகழ்ச்சிகளில் முதல் இரு நாள்களும் மகிழ்வு பற்றிய தலைப்பிலே உரைகள் இடம்பெற்றன.

நான்காயிரத்திற்கு மேற்பட்ட அர்ப்பண வாழ்வு வாழ்வோர் கலந்துகொள்ளும் இந்நிகழ்வுகள், பிப்ரவரி 2, வருகிற செவ்வாய் மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியோடு நிறைவடையும். இதோடு, அர்ப்பண வாழ்வு ஆண்டும் நிறைவு பெறும். பிப்ரவரி 1, வருகிற திங்களன்று ஆயிரக்கணக்கான அர்ப்பண வாழ்வு வாழ்வோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்திப்பார்கள்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.