2016-01-29 16:05:00

யூபிலி ஆண்டில் முதல் சனிக்கிழமை பொது மறைக்கல்வியுரை


சன.29,2016. இரக்கத்தின் யூபிலி ஆண்டை முன்னிட்டு, புனித பாத்ரே பியோ, புனித Leopoldo Mandić ஆகிய இருவரின் திருஉடல்கள் தற்காலிகமாக வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் வைக்கப்படுவது, இன்னும், இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் குறித்த விபரங்களை, பேராயர் Rino Fisichella அவர்கள் தலைமையிலான குழு, இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியது.

நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Fisichella அவர்கள், இந்த யூபிலி ஆண்டில், முதன் முதலாக நடைபெறவிருக்கும் சனிக்கிழமை பொது மறைக்கல்வியுரை, சனவரி 30 இச்சனிக்கிழமையன்று நடைபெறும், இதில் பங்குகொள்வதற்கு ஏற்கனவே இருபதாயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். பல திருப்பயணிகளின் வேண்டுகோளின்பேரில், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமையன்று திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யூபிலி ஆண்டில் இதுவரை நடந்துள்ள நிகழ்வுகளை முதலில் விளக்கிய பின்னர், இறைவனின் இரக்கப் பணிகளில் தங்கள் வாழ்வைச் செலவிட்ட இவ்விரு புனிதர்களின் திருஉடல்கள் வத்திக்கானுக்குக் கொண்டுவரப்படுவது குறித்து விளக்கினார் பேராயர் Fisichella.

இவ்விருவரும் உரோம் நகரில் வாழ்ந்த புனித லாரன்ஸ் ஆலயத்திற்கு, பிப்ரவரி 3ம் தேதி இவர்களின் திருஉடல்கள் கொண்டு வரப்படும். அங்கு பொது மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 5ம் தேதி பவனியாக, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்குக் கொண்டு வரப்படும். இவை, பிப்ரவரி 11ம் தேதி காலை வரை வைக்கப்பட்டிருக்கும்.

மேலும், அனைத்துக் கண்டங்களிலிருந்தும் திருத்தந்தையால் ஆயிரத்திற்கு மேற்பட்ட இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், இவர்கள் இந்த யூபிலி ஆண்டு முழுவதும், குறிப்பாக, தவக்காலத்தில் பணியில் இருப்பார்கள், 700 பேர் உரோம் வருவார்கள் என்றும் கூறினார் பேராயர் Fisichella.

புனித பாத்ரே லெயோபால்டு அவர்கள், 1983ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி புனிதராக அறிவிக்கப்பட்டார். தனது வாழ்வின் பெரும்பகுதியை பதுவை நகரில் செலவழித்த இப்புனிதர் குரோவேஷிய நாட்டைச் சேர்ந்தவர்.  

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், புனிதக் கதவுகள் திறக்கப்பட்ட பின்னர், உலகெங்கும் இந்த யூபிலி நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விசுவாசிகள் அனுப்பி வரும் படங்களும், ஆவணங்களும் உண்மையிலேயே வியக்க வைக்கின்றன, இதுவரை, யூபிலி நிகழ்வுகளில் 13 இலட்சத்து 92 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர் என்று பேராயர் Fisichella அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.