சன.29,2016. தலையில் அணிந்தால் மட்டுமே இரு சக்கர வாகனம் இயங்கும் வகையில் ஒரு புதிய தலைக்கவசத்தை சென்னை பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
சென்னை பெரம்பூர் கலிகி அரங்கநாதன் மாண்ட்போர்ட் மேல்நிலைப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் எம்.ஜெயக்குமார், எஸ்.ஸ்ரீராம், 10-ம் வகுப்பு மாணவி ஜெ.பூஜா ஆகியோர் இணைந்து இந்தப் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கியுள்ள புதிய தலைக்கவசத்தில் சிறிய அளவில் ஒரு சென்சாரையும், வாகனத்தில் ஒரு ரிசீவரையும் பொருத்தியுள்ளனர். தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் தலையில் அணிந்தால் மட்டுமே வாகனத்தில் உள்ள ரிசீவருக்கு சமிக்ஞை அனுப்பும். அதன் பின்னர் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது அது ஸ்டார்ட் ஆகும். தலைக்கவசத்தில் உள்ள சென்சாரை, புளூ டூத் மூலம் மற்ற வாகனங்களைப் பகிர்வு செய்தும் இயக்க முடியும்.
மேலும், இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மற்றும் ரிசீவர் ஆகியவை வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தையும் கட்டுப்படுத்துமாறும் இம்மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் பட்டதும் இந்த சென்சார் பொருத்தப்பட்ட வாகனத்தின் முகப்பு விளக்கின் ஒளி உமிழும் அளவு குறைந்துவிடும்.
“அதிக ஒளி உமிழும் முகப்பு விளக்குகளால் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால் எதிரே வாகனங்கள் வரும்போது ஒளி உமிழும் அளவைக் கட்டுப்படுத்தினால் விபத்துகள் பெருமளவு குறையும் என்பதால் இப்படி வடிவமைத்துள்ளோம். இதன் விலை இப்போது இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. இதை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும்போது விலை பெரிதும் குறையும். இந்தத் தயாரிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இதை அனைத்து இருசக்கர வாகனங்களிலும் பொருத்தக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றனர் புதிய தலைக் கவசத்தை வடிவமைத்த மாணவர்கள்.
விஐடி பல்கலைக்கழகத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 1,400 மாணவர்கள் பங்கேற்ற தென்னிந்திய அளவிலான அறிவியல் செயல்பாடு கண்காட்சியில் இந்தக் கண்டுபிடிப்பு முதலிடத்தைப் பெற்றது.
ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |