2016-01-29 14:53:00

இது இரக்கத்தின் காலம்: அடுத்திருப்பவர் பசியாற்றுவது நம் கடமை


நான்கு நாட்களாக பசியால் வாடிய ஓர் ஏழை, ஒரு மாந்தோப்புக்குள் நுழைந்து, ஒரு கல்லைத் தூக்கி எறிந்தார். சில பழங்கள் மரத்திலிருந்து விழுந்தன. மேலே எறிந்த கல் நேராக, தோப்பின் இன்னொரு புறம், குதிரையில் வேட்டைக்குச் சென்றுக் கொண்டிருந்த மன்னரின் தலையில் போய் விழுந்தது. நல்லவேளையாக,  அவர் கிரீடம் அணிந்திருந்ததால், கல்லால் எவ்வித காயமும் ஏற்படவில்லை.  மன்னர் அதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால், சுற்றி நின்ற மந்திரிகள், வேலைக்காரர்கள், மன்னரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, தோப்பு முழுக்க சுற்றி, மாம்பழத்தை சுவைத்துக் கொண்டிருந்த ஏழையைப் பிடித்து இழுத்து வந்தார்கள். ஒரு நீதிபதியின் முன் நிறுத்தி, 'மன்னரின் தலை உடைந்திருந்தால், அவரது உயிருக்கே ஆபத்து வந்திருக்கும், இத்தகைய செயலுக்கு காரணமான இவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்' என வாதாடினர். நீதிபதியும் தீர்ப்பை வழங்கி விட்டார்.

மரணதண்டனை கைதிகளை மன்னர் முன் நிறுத்த வேண்டும் என்பது விதி. மரண தண்டனை அடைந்தவரை, மன்னர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினர். அவர் நடந்ததைக் கேட்டறிந்தார். “இவனை விடுதலை செய்யுங்கள். பசியால் துடித்த இவன் இப்படி அறியாமல் செய்துவிட்டான். தன் குடிமக்களைப் பசியால் துடிக்க விட்டது என் ஆட்சியில் நான் செய்த குற்றம், என் ஆட்சிக்கும் இது அவமானம். எனவே, அரண்மனை கருவூலத்தில் இருந்து இவனுக்கு மாதம்தோறும் உதவித்தொகை கொடுக்க உத்தரவிடுகிறேன்,” என்றார் மன்னர்.

அடுத்தவரின் பசிக்கொடுமைக்கு, ஆள்பவர் மட்டுமல்ல, அடுத்திருப்பவரும் பொறுப்பேற்க வேண்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.