2016-01-28 16:12:00

திருத்தந்தையின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவேண்டும்


சன.28,2016. திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவரும், சமுதாயத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுக்காக உழைக்கும் திருத்தந்தையின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி வாழவேண்டும் என்று இரு திருஅவைத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்றுவரும் 51வது அகில  உலக திருநற்கருணை மாநாட்டில், திருத்தந்தையின் சார்பில் பங்கேற்றுவரும் மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், இப்புதனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது, வாழ்க்கையில் வாய்ப்பிழந்து தவிப்போருடன் பகிர்வை மேற்கொள்வதே, திருப்பலி நமக்குள் உருவாக்கவேண்டிய மாற்றம் என்று கூறினார்.

இம்மாநாட்டின் துவக்கத் திருப்பலியில் தான் பேசிய 'மூன்றாம் உலகப் போர்' என்ற வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், சக்தி வாய்ந்த நிறுவனங்கள் அழிவுக்குப் பயன்படும் ஏவுகணைகளைத் தயாரித்து வரும் வேளையில், நாம், பிறரன்பு, பகிர்வு ஆகிய ஏவுகணைகளை தயாரிக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

தான் சந்தித்துள்ள பல்வேறு மதத் தலைவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  சொற்களாலும், செயல்களாலும் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறிய கர்தினால் போ அவர்கள், திருஅவையின் தலைவரான திருத்தந்தையைப் பின்பற்றி, உலகத் தலைவர்களும், சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பல்வேறு இயற்கை இடர்பாடுகளைச் சந்தித்துள்ள போதிலும், பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள், ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வதைக் காண முடிகிறது என்று கூறிய கர்தினால் போ அவர்கள், இந்த நற்கருணை மாநாட்டிற்குப் பின் தான் திருத்தந்தைக்கு அளிக்கும் அறிக்கையில், இம்மக்களின் நம்பிக்கையைக் குறித்து பேசப் போவதாகக் குறிப்பிட்டார்.

சிறைக் கைதிகள், வறியோர், நோயுற்றோர் ஆகியோருடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்ட நேரங்கள், நம்மையும் இந்த செயல்பாடுகளில் ஈடுபடத் தூண்டுகின்றன என்று, இந்த நற்கருணை மாநாட்டை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களில் ஒருவரான, செபு பேராயர், ஹோசே பால்மா (Jose Palma) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.