2016-01-28 15:45:00

கிறிஸ்தவர்கள் தன்னலத்தை மையப்படுத்தி வாழமுடியாது


சன.,28,2016. "கிறிஸ்தவர்கள் என்ற முறையில், நாம் தன்னலத்தை மையப்படுத்தி இருக்க முடியாது, மாறாக, அடுத்தவரை நோக்கி, அடுத்தவருக்காக திறந்த மனதுடன் வாழவேண்டும்" என்ற கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 28, இவ்வியாழன் தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

இதற்கிடையே, டோகோ (Togo) நாட்டின் அரசுத்தலைவர்  Faure Essozimna Gnassingbé அவர்கள், இவ்வியாழனன்று, திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடனான சந்திப்பைத் தொடர்ந்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின்,  அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அலுவலகத்தின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லகர் அவர்களையும் சந்தித்து, பல்வேறு விடயங்களை விவாதித்தார், டோகோ அரசுத் தலைவர்  Gnassingbé .

திருப்பீடத்திற்கும் டோகோ நாட்டிற்கும் இடையேயான நல்லுறவு, அந்நாட்டின் வளர்ச்சியில், குறிப்பாக, கல்வித்துறையில் திருஅவை ஆற்றிவரும் பங்களிப்பு, ஆப்ரிக்காவின் சஹாராவை ஒட்டிய பகுதிகளில் அமைதி முயற்சிகள் போன்றவை, திருப்பீட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன.

இதே நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் விவகாரங்களில் ஆர்வமுடைய ஹாலிவுட் நடிகர் லியனார்தோ திகாப்ரியோ (Leonardo DiCaprio) அவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, அவரையும் திருப்பீடத்தில் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதாரக் கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் திகாப்ரியோ அவர்கள், உலக வெப்பமடைதலுக்கு எதிராக வர்த்தகத் தலைவர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு, சுற்றுச்சூழல் முன்னேற்றத் திட்டங்களுக்கு, லியனார்தோ திகாப்ரியோ அறக்கட்டளை, 15 மில்லியன் டாலர்கள் வழங்கும் என்றும் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.