2016-01-27 14:48:00

புதன் மறைக்கல்வி உரை– இஸ்ரயேல் வரலாற்றில் இறை இரக்க தலையீடு


சன.,27,2016. அன்புச் சகோதர சகோதரிகளே! இறை இரக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த புனித ஆண்டின் சிந்தனைகளால் தூண்டப்பட்டு இடம்பெறும்  நம் வாராந்திர மறைகல்வி போதனைகளின் தொடர்ச்சியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு வரலாற்றில் இறை இரக்கத்தின் செயல்பாடு குறித்து இன்று நோக்குவோம் என தன் இப்புதன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆபிரகாமை அழைத்ததிலிருந்து துவங்கி, இஸ்ரயேலின் வரலாற்றில் எத்தகைய இரக்கத்துடன் கூடிய அக்கறையுடன் இறைவன் செயல்பட்டார் என்பதை விவிலிய நூல்கள் காண்பிக்கின்றன. எகிப்திலிருந்து துவங்கிய விடுதலைப்பயண அனுபவங்களில் இறை இரக்கம் தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காணலாம். ஒவ்வொரு காலத்திலும் இறைவன், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குரல்களுக்குச் செவிமடுப்பதுபோல், இஸ்ரயேலரின் அழுகுரல்களுக்கும் செவிமடுத்தார். தன்னுடைய இரக்கம் மற்றும் மீட்பின் இடையீட்டாளராக, மோசேயை உயர்த்தினார். மோசே வழியாக இஸ்ரயேலை விடுதலை நோக்கி வழிநடத்திய இறைவன், உடன்படிக்கையின் வழியாக, அவர்களைத் தன் உடமையாக்கினார். அவர்களை, தன் தனிச் சொத்தாக்கினார். அவர்களை,  குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் மாற்றினார். இறைவனின் கண்களுக்கு அவர்கள் விலைமதிப்பற்ற மக்களினமாயினர். தம் மகனாம் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் புதிய, நிலையான உடன்படிக்கையை உருவாக்கியதில், இறைவனின் இரக்கம் தன் உச்ச நிலையைக் கண்டது. இந்த உடன்படிக்கையின் வழியாகவே நாம், நம் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற்று, இரக்கமும் நன்மைத்தனமும் நிறைந்த தந்தையின் அன்புநிறை மக்களாக உண்மையில் மாறினோம்.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கோர் ஊனும்' எனும் திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை, இந்த யூபிலி ஆண்டின் தவக்காலத்தில் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஏற்பாடு செய்துவரும் ஒருநாள் தியானத்தில் கலந்துகொண்டு அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.