2016-01-27 16:00:00

உரையாடல் கலாச்சாரத்தை உருவாக்குவது, திருஅவையின் கடமை


சன.27,2016. மனித சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும், உரையாடல் கலாச்சாரத்தை உருவாக்கி, நீதியையும், அமைதியையும் உறுதி செய்வது, திருஅவையின் கடமை என்று, இந்திய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்து மதத்தின் அடிப்படைவாதக் குழுவென்று அறியப்படும் RSS, அதாவது, ‘இராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தியாவின் சிறுபான்மைக் குழுவினரான கிறிஸ்தவர்களுடனும், இஸ்லாமியருடனும் உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ள விருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலத்தின் பெர்ஹாம்பூர் ஆயர் சரத் சந்திர நாயக் அவர்கள், ஃபிதேஸ் (Fides) செய்திக்கு இவ்வாறு ஒரு கூற்றை அனுப்பியுள்ளார்.

உண்மையான உரையாடல், மக்களிடையே நிலவும் பல சந்தேகங்களைத் தீர்க்கும் என்று கூறிய ஆயர் நாயக் அவர்கள், உரையாடல் முயற்சியில் அருள்பணியாளர்களும், துறவியரும் மட்டும் ஈடுபடவேண்டும் என்று பொருளல்ல, மாறாக, ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்த முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

RSS அமைப்பு விடுத்துள்ள இந்த அறிக்கைக்குப் பின்னணியில் பல மறைமுகமான காரணங்கள் இருக்கலாம் என்றும், வன்முறைகளில் ஈடுபடும் அடிப்படைவாதக் குழுக்களுடன் உரையாடல் மேற்கொள்வது பலன் தர வாய்ப்பில்லை என்றும் பல சிறுபான்மைத் தலைவர்கள் கூறியுள்ளனர் என்று ஃபிதேஸ் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.