2016-01-27 15:41:00

இஸ்ரேல்,பாலஸ்தீனம்,சிரியா பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை


சன.27,2016. அனைத்துலக சமுதாயத்தின் உறுதியான ஆதரவுடன், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே நேரிடையாகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றால் மட்டுமே, இவ்விரு தரப்புக்கும் இடையே அமைதிக்கான வழிகள் முன்னோக்கிச் செல்ல முடியும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாலஸ்தீன விவகாரம் உட்பட மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலில் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளோடு, இஸ்ரேலும், பாலஸ்தீனாவும் பாதுகாப்பு, வளமை மற்றும், அமைதியான நல்லிணக்கத்தை அனுபவிக்க வேண்டுமெனில், இவ்விரு நாடுகளும் நேரிடை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை, ஆயினும் இதற்கு இவ்விரு தரப்பலிருந்தும் துணிச்சல் நிறைந்த உறுதிப்பாடு தேவைப்படுகின்றது என்றும் கூறினார் பேராயர் அவுசா.

சிரியாவில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது, இதில், உலகெங்கிலுமிருந்து வந்து சண்டையிடும் வெளிநாட்டுப் போராளிகள், சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளில் சொல்ல முடியாத கொடூரச் செயல்களைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார் பேராயர் அவுசா.

ஐ.நா., பிரிட்டன், ஜெர்மனி, குவைத், நார்வே ஆகிய நாடுகளால் வருகிற பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்படும் நான்காவது மனிதாபிமான கருத்தரங்கு, மத்திய கிழக்குப் பகுதியில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் களையவும், அனைத்து மோதல்களுக்குத் தீர்வு காணவும் முயற்சிக்கும் என்று திருப்பீடம் நம்புவதாகத் தெரிவித்தார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.