2016-01-27 15:08:00

இது இரக்கத்தின் காலம் – பெற்றோர்க்கு காட்டும் மரியாதை


பள்ளிச் சிறுவன் ஒருவன், உணவு இடைவேளை நேரத்தில் தன் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மற்ற சிறுவர்கள் பேசிக்கொண்டும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டும், உணவைக் கீழே இறைத்து கொண்டும் சாப்பிட்டார்கள். அவர்கள் அதைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இந்தச் சிறுவன் அமைதியாக ஒரு சோறுகூட கீழே சிந்தாமல் கவனமாகச் சாப்பிட்டான். ஒன்றிரண்டு சோறுகள் தூக்குச் சட்டியில் ஒட்டிக் கொண்டு இருந்தாலும், அதையும் எடுத்து சாப்பிடுவது அவன் பழக்கம். இதைப் பார்த்த அவன் நண்பர்கள் அவனை, "பிச்சைக்காரன்" என்று கேலி செய்தனர். அவன் அதற்காகவும் கவலைப்படவில்லை. இதைக் கூர்ந்து கவனித்த அவன் நண்பனொருவன் ஒருநாள் இதைப் பற்றி கேட்ட பொழுது, அந்தச் சிறுவன் அதற்கு, இப்படி விளக்கம் கொடுத்தான். "இதோ பார் நண்பா ..நான் ஒரு சோறுகூட வீணாகாமல் சாப்பிடுவது என் பெற்றோர்க்கு நான் காட்டும் மரியாதை. என் அன்னை அதிகாலையில் எழுந்து, குளிர் பனி என்று பாராமல், எனக்குப் பிடித்த உணவை அன்புடன் செய்து கொடுத்து என்னை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார். என் தந்தை, இரவு பகல் என்று பாராமல், வெளியே சென்று உழைத்து வீட்டை நடத்திச் செல்ல பொருள் ஈட்டி கொண்டு வருகின்றார். அது மட்டுமல்ல, நாம் கீழே சிந்தி வீணாக்கும் ஒவ்வொரு சோறும் நம் தாய் தந்தையரோடு மழை வெயில் பாராது தன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபடும் விவசாயிகளையும் அவமதிப்பதாகும். உலகில் எவ்வளவோ பேர் உண்ண உணவில்லாது அவதிப்படுகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் சிறிதுகூட சிந்தாமல் வீணாக்காமல் சாப்பிடுகிறேன்" என்று பதில் அளித்தான் சிறுவன். பெற்றவரும், மற்றவரும், நமக்காகப் படும் துன்பங்களை உணர்ந்து, வாழத் தூண்டுகிறது இரக்கத்தின் காலம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.